கோலாலம்பூர் – கடந்த இரண்டு மாதங்களாக மலேசியா வானத்தை மூடியிருந்த புகைமூட்டம் பலவகைகளிலும் மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை வெகுவாகப் பாதித்திருந்தது.
ஆனால், இன்று மேல்நோக்கி வானத்தைப் பார்த்தவர்களின் கண்களில் எல்லாம் மலர்ச்சி – மகிழ்ச்சி!
ஆம்! புகைமூட்டம் ஏறத்தாழ முற்றிலும் விலகி, நிர்மலமான வானம், தெளிவாகக் காட்சியளித்தது.
இனி நடைப் பயிற்சி போகலாம், முகமூடிகள் அணிய வேண்டியதில்லை, பள்ளிகள் மூடப்பட்டு, பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற கவலை இல்லை என மக்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் வேளையில்,
நட்பு ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் ஒரு சுவையான விவாதம் அரங்கேறியிருக்கின்றது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் மலேசிய மண்ணில் ரஜினிகாந்த் காலடி வைத்த நல்ல நேரம்தான் நாட்டைச் சூழ்ந்திருந்த புகைமூட்டம் விலகியிருக்கின்றது என்ற சுவையான விவாதத்தை ஒரு சிலர் இணையப் பக்கங்களில் கொளுத்திப் போட, அது இப்போது சுவையான விவாதமாக வெகுவேகமாக இணையத் தளங்களில் பரவி வருகின்றது.
ரஜினி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கால் வைத்த நாள் முதல் இணையப் பக்கங்களில் ஒரேயடியாக அவரது புகைப்படங்கள், செய்திகள், இரசிகர்களின் கருத்துக்கள், விவாதங்கள் – இவைதான் ஆக்கிரமித்து வருகின்றன.
“வானத்தைப் போல தூய்மையான மனம் படைத்தவர் – வான் மேகங்களின் வெண்ணிறத்தைத் தனது தாடியில், அண்மையக் காலமாக பதுக்கிவைத்திருப்பவர் ரஜினி. அதனால்தான் அந்த நல்ல மனம்கொண்டவரின் நமது நாட்டு வருகையால் புகைமூட்டமும் விலகிவிட்டது” என இணையப் பக்கங்களில் கொண்டாடி குதூகலிக்கின்றது அவரது இரசிகர் வட்டாரம்.
ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு அவரது ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேரப் பற்றாக்குறை, இரசிகர்கள் தொல்லை ஆகிய காரணங்களால், முதலில் அவருக்குப் பதிலாக டூப் – அதாவது அவரைப் போன்ற ஒரு நகல் நடிகரை வைத்து முதலில் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன என்றும், பின்னர்தான் அவர் பங்கு கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன என்றும் கசிந்த ஒரு தகவல் நமக்குத் தெரிவிக்கின்றது.