வாஷிங்டன் – பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெருக்க வேண்டுமா? தைரியமாக கீழ் கண்ட நாடுகளில் முயற்சி செய்யலாம் என உலகவங்கி சமீபத்தில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. மலேசியா கடந்த ஆண்டை விட இரு இடங்கள் முன்னேறி 18-வது இடம் பிடித்துள்ளது.
‘எளிதாக வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடுகள் 2016’ என்ற அந்த தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியானது. உலக அளவில் 189 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, ஆசிய அளவில் சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தில் மலேசியா உள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், மலேசிய வர்த்தகம் குறித்த இந்த அறிக்கை பற்றி, அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் (படம்) கூறுகையில், “வர்த்தகம் தொடர்பான செயல்முறைகளில் உள்ள இயலாமையை அரசு நீக்கியதற்கான மற்றொரு உறுதிப்படுத்துதல் தான் இந்த அறிக்கை (உலக வங்கியின் பட்டியல்)” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மற்ற ஆசிய நாடுகளில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டி உள்ளது. கடந்த ஆண்டை விட சுமார் 12 இடங்கள் முன்னேறி இந்த வருடம் உலக அளவில் 130-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.