மலாக்கா – கபாலி படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா வந்த நாள் தொடங்கி பரபரப்பிற்குப் பஞ்சமே இல்லாத அளவிற்கு பல நல்ல விசயங்களும், பல எதிர்மறைக் கருத்துகளும் பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் வழியாகப் பரவி வருவதைக் காண முடிகின்றது.
இந்நிலையில், ரஜினிகாந்த கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அன்று அவரை அழைத்துச் செல்வதற்காக வந்த லிமௌசின் வகை ஆடம்பரக் காரை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் தற்போது பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மலேசியா வந்த ரஜினியை, விமான நிலையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு போய், மாலை 4 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள தங்கும்விடுதியில் இறக்கிவிட வேண்டும் என்றதன் பெயரில் அந்த கார் சேவை நிறுவனத்திடம் பேசப்பட்டுள்ளது.
ஆனால் ரஜினியோ மாலை 6 மணிக்கு தான் விமான நிலையம் வந்திறங்கியுள்ளார். இந்நிலையில், ரஜினியை அழைத்துச் செல்ல அங்கு வந்த ஏற்பாட்டாளர்கள், அந்த ஓட்டுநரை மலாக்கா வரை செல்லும் படி கட்டாயப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் தான் அந்தக் கார் சேவை பேசப்பட்டுள்ளது என்றும், மாலை சிலாங்கூரில் உணவுவிடுதி ஒன்றின் திறப்பு விழாவிற்கு வரும் வேறு ஒரு முக்கியப் பிரமுகரை ஏற்றச் செல்ல வேண்டும் என்று அந்த 25 வயதான ஓட்டுநர் எவ்வளவோ சொல்லியும் அதை ஏற்றுக் கொள்ளாத ஏற்பாட்டாளர்கள் அவரது செல்பேசியைப் பறிமுதல் செய்து மலாக்கா வரை அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
மலாக்காவை அடைந்த பின்னர் 8.20 மணியளவில் தான் ஒட்டுநருக்கு செல்பேசி திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
இதனால், இரண்டாவது முக்கியப் பிரமுகருக்கு கார் சேவை வழங்க இயலாமல் போன அந்த நிறுவனம் தற்போது அவர்கள் தரப்பில் இருந்து நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.