சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் குடும்பத்தினர் சமீபத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 மல்டிப்ளக்ஸ் திரைஅரங்குகளை வாங்கியதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ள நிலையில், பரபரக்கும் மற்றொரு செய்தியாக, அஜித்தின் புதிய படமான வேதாளத்தின் மொத்த திரையீட்டு உரிமையையும், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆரம்பத்தில் ஜாஸ் நிறுவனம் சென்னை உரிமையை மட்டும் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்த உரிமையும் அந்நிறுவனமே வாங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழ் சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய ஆட்சியில், ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தமிழ் சினிமா இருந்த நிலை, தற்போதும் தொடர்வதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 23-ம் தேதி விசாரணை தொடங்க உள்ள நிலையில், தற்போது ஜாஸ் சினிமா வடிவில் மீண்டும் புதிய பூதம் கிளம்பி உள்ளது.
இதன் பாதிப்பு கண்டிப்பாக ஜெயலலிதா மீது எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.