கோலாலம்பூர் – உலகை ஏறக்குறைய முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டங்களுடன் பேஸ்புக் நிறுவனம் வேகமாக காய் நகர்த்தி வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, பேஸ்புக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பயனர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் 1.5 பில்லியனாக இருப்பது தெரிய வந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் வெறும் 1.5 பில்லியன் பேரை செயல்பாட்டில் இருக்கும் பயனர்களாக வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் எப்படி ஆக்கிரமிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் தவறாகிவிடும்.
பேஸ்புக்கிற்கு அடுத்ததாக அதிக பயனர்களைக் கொண்டிருக்கும் செயலிகளான வாட்சாப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளும் பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்தவை தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை முறையே 900 மில்லியன் மற்றும் 300 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
இவை மூன்று தற்போதய நிலையில் உச்சத்தில் இருக்கும் செயலிகளாகும். இந்நிலையில், பேஸ்புக்கின் அடுத்த திட்டம் தான் இலவச இணையம். தற்போதய சூழலில் உலக அளவில் 3 பில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த 5 வருடங்களுக்குள் இந்த எண்ணிக்கையை 6 பில்லியன் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிகையில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்க தான் பேஸ்புக் நிறுவனம் தற்போது இந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் குறி வைத்துள்ளது.
இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இணையத்தை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களுக்கான அடிப்படை இணையத்தை இலவசமாகக் கொடுத்து அதன் மூலம் பெரும் வருவாயை ஈட்டுவதே பேஸ்புக்கின் நோக்கம்.
இலவச இணையம் மூலம் எப்படி வருவாயை ஈட்ட முடியும் என்று கேள்வி எழலாம். அதற்குத் தான் பேஸ்புக் மூன்று திட்டங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.
- அனைத்து இடங்களிலும் பேஸ்புக்
- பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் பயனர்களுக்கும் வருவாய்
- இணையத்தை மூலை முடுக்குகளில் பரப்புதல்
இந்த மூன்று திட்டங்களையும் பேஸ்புக் கடந்த சில வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தத் துவங்கி விட்டது. அதற்கான பலன்கள் அடுத்த சில வருடங்களில் தெரியவரும். அப்பொழுது உலகம் முழுவதும் பேஸ்புக் வியாபித்து இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.