கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது தமக்கு கவலை அளித்திருப்பதாக சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராகவும், அதன் தலைவர்களுக்கு எதிராகவும் பேசுபவர்களையும், துன் மகாதீரையும் நெருக்கடிக்குள்ளாக்குவதும், தொல்லை செய்வதும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் பிரதமர் நஜிப்பை விமர்சித்த போதும், அது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பிய போதும், மகாதீர் எந்தவித குற்றமும் புரியவில்லை என அன்வார் தெரிவித்தார்.
“துன் மகாதீரே இப்படித்தான் நடத்தப்படுவார் எனில், இந்த அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்கும், விமர்சிக்கும் சாதாரண மலேசியர்களின் ஜனநாயக உரிமைக்கு மிகுந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம்,” என தமது வழக்கறிஞர்கள் மூலம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அன்வார் கூறியுள்ளார்.
மகாதீரிடம் விசாரணை நடத்துவதற்குப் பதில், பொதுமக்கள் அரங்கில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பிரதமர் நஜிப்பும், அரசாங்கமும் விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடுகள் காரணமாக, பிரதமர் மீதான நம்பிக்கை தொடர்பில் நிலைமை மேலும் மோசமடையும் என்று தெரிவித்துள்ளார்.
மகாதீரிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. புக்கிட் அமானின் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மகாதீரை சந்தித்து, அவரது வாக்குமூலத்தைப் பெற்றதாகவும், பெர்சே 4 பேரணியில் பங்கேற்றது உட்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மகாதீரிடம் விளக்கம் பெறப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.