காராக்: நேற்று புதன்கிழமை காராக் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திடீர் நிலச்சரிவில் கார்கள் பல புதையுண்டன என முதல் கட்ட செய்திகள் தெரிவித்தாலும், தற்போது ஒரே ஒரு லாரியைத் தவிர மற்ற கார்கள் எதுவும் நிலச்சரிவில் சிக்கிக் கொள்ளவில்லை என்றும், யாருக்கும் இதுவரை பாதிப்பில்லை என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
மண்சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் கனரக வாகனங்கள் (டிராக்டர்)
புக்கிட் திங்கி அருகே இந்நிலச்சரிவு நிகழ்ந்தது.
தண்ணீருடன் கலந்த மண் போன்ற கலவை திடீரென சரிந்து விழுந்ததாக நிலச்சரிவை நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலையின் இருவழிப் பாதையும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரை நோக்கி வரும் பாதையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது. பெந்தோங் நோக்கிய பாதையில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதிப்புள்ளது.
சில கிலோமீட்டர் தூரத்துக்கு நிலச்சரிவினால் நிலைகுத்தியிருக்கும் வாகனப் போக்குவரத்து
“இந்த நிலச்சரிவில் சில கார்கள் புதையுண்டதாகக் கூறப்படுகிறது. சற்று முன் அதிகாரிகளுடன் பேசியபோது இதை அறிந்தேன். நிலச்சரிவை சீரமைக்கும் பணி புதன்கிழமை இரவுக்குள் முடிவடைய சாத்தியமில்லை. இந்த நடவடிக்கை வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கும் எனத் தோன்றுகிறது” என ஸ்டார் ரேடியோ ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த பிரிசில்லா பேட்ரிக் தெரிவித்துள்ளார் என ஸ்டார் இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
எனவே வாகனமோட்டிகள் மாற்றுப் பாதைகளை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மீட்புக் குழுவினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.