சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் குடும்பத்தினர் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 மல்டிப்ளக்ஸ் திரைஅரங்குகளை வாங்கியதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை திமுக தலைவர் கருணாநிதி கிளப்பினார். அதன் பிறகு குறிப்பிட்ட அந்த மல்டிப்ளக்சின் நிர்வாகமே அதற்கான விளக்கத்தை அளித்ததால் அந்த விவகாரம் மறைந்து போனது.
இந்நிலையில், கருணாநிதி அந்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன் கேள்வி ஒன்றை தற்போது எழுப்பி உள்ளார். இதற்கு சரியான விளக்கத்தை தொடர்புடைய நபர்கள் வெளியிடவில்லை என்றால் அது கண்டிப்பாக தேர்தல் சமயத்தில் பூதகரமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும், ‘ஜாஸ்’ சினிமா நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்தில் உள்ள நிறுவனம், திரை அரங்கை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால், அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? ஜாஸ் சினிமா நிறுவனம், கோவை, பீளமேடு, பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து, 2015 ஜனவரியில் பெற்ற, 42.50 கோடி ரூபாய் கடனுக்கு, ‘லுாக்ஸ்’ திரையரங்குகளில் உள்ள புரொஜக்டர் (ஒளிப்படக்காட்டி), பர்னிச்சர், ஏசி ஆகியவற்றை அடமானமாக காட்டிஉள்ளனர்.”
“திரை அரங்குகளை விலைக்கு வாங்காமல், ஐந்தாண்டு குத்தகைக்கு மட்டுமே எடுத்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனம், திரையரங்குகளில் உள்ள தளவாடங்களைக் காட்டி, தேசிய வங்கியில் கடன் பெற முடியுமா? ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’ என்பர்; இவர்களின் புளுகு மூட்டையை, எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும்?” என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.