இலண்டன் – பிரிட்டனுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று வெம்ப்ளி அரங்கில் 60 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றிய போது, இதுவரை மின்சார வசதி இல்லாத 18,000 இந்தியக் கிராமங்களுக்கு அடுத்த ஆயிரம் நாட்களுக்குள் மின்வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என அறிவித்தார்.
வெம்ப்ளி அரங்கில் உரையாற்றும் நரேந்திர மோடி
நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பொதுக் கூட்டத்தில் மோடியோடு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். கேமரூனின் மனைவி சமந்தா கேமரூன் சேலை அணிந்துகொண்டு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சில இடங்களில் மின்வசதிகள் இருந்தாலும் 24 மணிநேரமும் அவை கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், பல கிராமங்களில் மின்சார வசதியை வழங்கும் தூண்கள் கூட இன்னும் நிர்மாணிக்கப்படவில்லை என்றார். கூடியவிரைவில் அனைத்தையும் செய்து முடிப்போம் என்று சூளுரைத்த மோடி, 2019ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்படும் வேளையில் நாடு முழுமையிலும் 24 மணி நேர மின்சார வசதிகள் கிடைப்பதை தாம் உறுதி செய்யவிருப்பதாகவும் கூறினார்.
சேலை அணிந்து கொண்டு வெம்ப்ளி அரங்கம் வந்த கேமரூனின் மனைவி சமந்தா கேமரூன்….
நாட்டின் மின்சாரத் தேவைகளை அடைய, சூரிய மற்றும் காற்றலை சக்திகளும், மறுசுழற்சி முறையிலான சக்திகளும் (renewable energy) பயன்படுத்தப்படும் என்றும் நாள் ஒன்றுக்கு 175 கிகாவாட் அளவிலான மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.