பாரிஸ்- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இருந்து மலேசிய அரசு குழுவினர் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளனர். தாக்குதல் நடந்த சமயத்தில் வெளியே எங்கும் செல்லாமல் இருந்ததால், தாங்கள் தப்பியதாக மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ மாநாட்டில் பங்கேற்பதற்காக நஸ்ரி உள்ளிட்ட குழுவினர் பாரிஸ் சென்றிருந்தனர். மாநாடு முடிந்த அதே நாளில்தான் தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
“தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வெறும் ஐநூறு மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தங்கு விடுதியில் தான் மலேசிய குழுவினர் தங்கியிருந்தோம். அன்றைய இரவு வெளியே செல்ல வேண்டாமென முடிவெடுத்து, அறையிலேயே இருந்துவிட்டோம்” என்று நஸ்ரி தெரிவித்துள்ளார்.
“மாநாடு மாலை ஆறு மணியளவில் முடிந்தபோது மிகச் சோர்வாக இருந்தேன். பாரிசில் இருந்து மறுநாள் புறப்பட வேண்டும் என்பதால் அன்றைய இரவு வெளியே செல்வதாகத் திட்டம் இருந்தது. எனினும் சோர்வாக உணர்ந்தபடியால் வெளியே எங்கும் செல்லவில்லை. மலேசிய குழுவினர் வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிட்டோம். நல்லவேளையாக தாக்குதல் நடத்த இடத்துக்கு நாங்கள் போகவில்லை. அப்படிச் சென்றிருந்தால், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நாங்களும் ஆளாகியிருந்திருப்போம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று நஸ்ரி தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலை தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வரை தாக்குதல் நடத்தப்பட்ட விவரமே தமக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதலுக்குப் பிறகு தங்குவிடுதியில் பாதுகாப்பு கெடுபிடிகள் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதை தம்மால் காண முடிந்ததாகக் கூறியுள்ளார்.
பாரிசுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கும் மலேசியர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“அவர்கள் (தீவிரவாதிகள்) பொது இடங்களை குறி வைப்பதன் மூலம் உயிரிழப்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலேயே கவனமாக உள்ளனர். எனவே மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என நஸ்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நஸ்ரியை உள்ளடக்கிய மலேசிய குழுவினர் சனிக்கிழமை மாலை பத்திரமாக மலேசியா வந்தடைந்தனர்.