Home Featured நாடு பேராக் சட்டமன்ற சபாநாயகர்: ராஜினாமாவா? நெருக்கடியில் தேவமணி!

பேராக் சட்டமன்ற சபாநாயகர்: ராஜினாமாவா? நெருக்கடியில் தேவமணி!

749
0
SHARE
Ad

sk-devamany-jan17-300x202ஈப்போ- பேராக் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து வாக்களித்தபடி இன்னும் விலகாதது ஏன் என்று மஇகா துணைத் தலைவர் தேவமணிக்கு, ஐசெக உதவித் தலைவர் குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பதவி குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மற்றொரு ஜசெக தலைவரும், பேராக் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசனும் “துணைத் தலைவராக வென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியவர் இப்போது, தேசியத் தலைவரின் முடிவுக்கும் பிரதமரின் முடிவுக்கும் விட்டு விடுகின்றேன் என்று கூறியிருக்கின்றார். சொல்வதற்கு முன்னால் இதுபற்றி அவர் யோசித்திருக்க வேண்டும்” என்று சாடியுள்ளார்.

அண்மையில் நடந்த மஇகா மறுதேர்தல்களின்போது, துணைத் தலைவருக்கான பிரச்சாரத்தில் தேவமணி வென்றாலும் சட்டமன்ற அவைத்தலைவர் என்பதால் அவர் பேராக்கிலேயே முடங்கிக் கிடப்பார் என்பது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கின.

#TamilSchoolmychoice

அவற்றை முறியடிக்கும் விதமாக, தேர்தலில் வென்றால் நான் எனது சட்டமன்ற அவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்று தேவமணி அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்துதான்  அவருக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

m-kulasegaranமஇகா தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பாக தாம் வழங்கிய வாக்குறுதியை தேவமணி நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜசெகவின் குலசேகரன் (படம்) வலியுறுத்தி உள்ளார்.

“கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக தேவமணி கூறியிருந்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மஇகா தேர்தலில் பேராளர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக தமது சபாநாயகர் பதவியை அவர் பயன்படுத்தினாரா? இல்லையேல் தமது தற்போதைய பதவியைப் பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் ஏதேனும் ஆதிக்கம் மிகுந்த பதவியை, அதாவது அமைச்சர் பதவியைப் பெற அவர் முயற்சிக்கிறாரா?” என குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய தேவமணியை பதவியிலிருந்து அகற்ற பேராக் சட்டமன்றத்தில் உள்ள தேசிய முன்னணி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி உள்ள அவர், இதன் மூலம் சபாநாயகர் பதவிக்கென்றே உள்ள கண்ணியத்தை, பெருமையை நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த தேவமணி, பின்னர் பேராக் சட்டமன்ற சபாநாயகராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் மஇகா உட்கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைக் குறித்து வைத்து களமிறங்கிய அவர், அத்தேர்தலில் வெற்றி பெற்றால் தமது சபாநாயகர் பதவியை துறப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கட்சித் தேர்தலில் வென்ற பின்னர், தாம் வகித்து வரும் சபாநாயகர் பதவி குறித்து பிரதமரும், மஇகா தேசியத் தலைவரும் முடிவெடுப்பர் என தேவமணி கூறுவதை ஏற்க இயலாது. ஏனெனில் பேராக் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். காரணம், அந்த உறுப்பினர்கள்தான் தேவமணியை சபாநாயகராகத் தேர்ந்தெடுத்தனர். எனவே பிரதமரும், மஇகா தேசியத் தலைவரும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுவது தவறு” என்றும் குலசேகரன் மேலும் கூறியுள்ளார்.