கோலாலம்பூர் – மலேசியாவில் அடுத்தவாரம் ஆசியான் மாநாடு (ASEAN Summit) நடக்க உள்ள நிலையில், வழக்கத்தை விட பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருப்பதால், ஐஎஸ் இயக்கத்தின் அச்சுறுத்தல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தை ஐஎஸ் இயக்கத்தினர் நடத்தி உள்ளதால், உலக நாடுகள் பெரும் பதற்றத்தில் உள்ளன. குறிப்பாக மலேசியாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 136 பேர் ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பல்வேறு செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளதால், எல்லைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அண்டைநாடுகளுடன் தீவிரவாதம் தடுப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டும் வருகிறது. இது குறித்து ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், “மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு நடைபெற இருப்பதால், காவல்துறை எந்தவகையிலும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துவருகிறது. மேலும், அண்டை நாடுகளுடன் பாதுகாப்பு பலப்படுத்துதல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.