புது டெல்லி – நிழல் உலக தாதா சோட்டா ராஜன், ஏறக்குறைய 30 வருடங்களுக்கு பிறகு தனது சகோதரிகளை சமீபத்தில் சந்தித்துள்ளார். சிபிஐ காவலில் கம்பிகளுக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ராஜேந்திர சதாஷிவ் நிகல்ஜி என்ற சோட்டா ராஜன் கடைசியாக தனது சகோதரிகளை சந்தித்தது 27 வருடங்களுக்கு முன்பு அவர் இந்தியாவை விட்டு வெளியேறும் போது தான். அதன் பிறகு, கடந்த மாதம் இந்தோனேசியாவின் பாலி தீவில், அந்நாட்டு காவல்துறையினரிடம் கைதானபோது தான் அவர் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. பின்னர் அவர் இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில் வட இந்தியாவில் தீபாவளியை தொடர்ந்து வரும் நாட்களில் சகோதரனின் நலனிற்காக கொண்டாடப்படும் ‘பாய் தோஜ்’ பண்டிக்கையின் போது தங்களது இளைய சகோதரனான சோட்டா ராஜனை சந்தித்து ஆசி வழங்க அவரது சகோதரிகள் சுனிதா சாக்காராம் சவான் மற்றும் மூத்த சகோதரியான மாலினி சக்பால் ஆகியோர் விரும்பினர். இதற்காக அவர்கள் சிபிஐயின் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
எனினும், சோட்டாவின் உயிருக்கு எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், கடுமையான விசாரணைக்கு பிறகு சிபிஐயின் சிறப்பு நீதிபதிகள் சோட்டாவை சந்திக்க அனுமதி வழங்கினர். இந்த சந்திப்பு சிபிஐ அலுவலகத்தில் நடந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு விசாரணைக்கைதியாக தனது சகோதரிகளை சந்தித்த சோட்டா ராஜன், அதன் பிறகு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.