ஈப்போ- சிறிய ரக விமானம் ஒன்று தெலுக் டாலாம் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதனால் புலாவ் பங்கோரில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பெரும் பரபரப்பு நிலவியது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.25 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது ‘பைபர் பிஏ-32’ வகையைச் சேர்ந்ததாக நம்பப்படும், சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான அந்தச் சிறிய ரக விமானத்தில் 3 ஆடவர்களும், ஒரு பெண்ணும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று நால்வரையும் மீட்டதாகவும், அதையடுத்து அவர்கள் பங்கோரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மீட்புக்குழுவின் பேச்சாளர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை.
அண்மைக்காலமாக விமான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற விபத்துக்களில் சிக்கிய அனைவருமே பலியாகிவிட்டதாகத்தான் தகவல்கள் வழக்கமாக வெளியாகின்றன.
இந்நிலையில் மலேசிய கடற்பகுதியில் நிகழ்ந்துள்ள மேற்குறிப்பிட்ட விமான விபத்தில், அதில் பயணம் செய்த நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சற்றே நிம்மதியளிக்கிறது.