பாரிஸ் – பாரிஸ் நகரத்தில் சமீபத்திய தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நகரத்தின் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு ஏராளமான அதிநவீன ஆயுதங்கள் புழக்கத்தில் இருந்ததும், உள்நாட்டில் பலரின் உதவியுடன் ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் சுதந்திரமாக இயங்கியதும் தெரிய வந்துள்ளது.
நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் இறங்கி பிரான்ஸ் காவல்துறை, லியான், போபிக்னி, லவ்லவ்சி, கிரேநோபிள் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அதிரடி சோதனைகளை ஒரே நேரத்தில் நடத்தியது. இந்த சோதனையில் ராக்கெட் லாஞ்சர், எந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவ தொடர்பாக தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளில் ஒருவனான சலாஹ் அப்தேசலாம் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இவன் பிரான்ஸ் குடிமகன் என்று கூறப்படுகிறது.
இந்த அதிரடி சோதனைகளின் மூலம், பிரான்சிலும், பெல்ஜியத்திலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்நாட்டினர் சிலரின் உதவியுடன் சுதந்திரமாக செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.