கோலாலம்பூர் – இன்று யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், ஏறக்குறைய 455,929 மாணவர்கள், 49,655 தேர்வு அதிகாரிகளின் கண்காணிப்பில் நாடு முழுவதுமுள்ள 8,172 மையங்களில் யு.பி.எஸ்.ஆர் தேர்வினை எழுதினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 514 தமிழ்ப்பள்ளிகளில், 15,701 மாணவர்கள் இந்த வருடம் யு.பி.எஸ்.ஆர் மதிப்பீட்டுச் சோதனைக்கு அமர்ந்தனர்.
தேசியப் பள்ளிகளில் ஏறக்குறைய 349, 663 மாணவர்களும், சீனப்பள்ளிகளில் ஏறக்குறைய 90,565 மாணவர்களும், தனியார் பள்ளிகளிலிருந்து ஏறக்குறைய 9,418 மாணவர்களும், மாற்றுத் திறன் கொண்ட 1,943 மாணவர்களும் இந்த வருடம் யு.பி.எஸ்.ஆர்- ஆரம்பப்பள்ளி அடைவுநிலை மதிப்பீட்டுச் சோதனையை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இன்று வெளியாகும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்வித் துணையமைச்சர் பி.கமலநாதன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“மாணவர்களின் சிறப்புத் தேர்ச்சி அவர்களது தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் புலப்படுத்துகின்றது. அதோடு யு.பி.எஸ்.ஆர் மதிப்பீட்டுச் சோதனைக்கு மாணவர்களைத் தயார்படுத்திய அவர்களது பெற்றோர்களுக்கும், எண்ணற்ற தியாகங்கள் புரிந்த ஆசிரியர்களுக்கும் இவ்வேளையில் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் கமலநாதன் நேற்று விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“நமது குறிக்கோள் அனைத்து பாடங்களிலும் ‘ஏ’-க்களைப் பெறும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல. நமது மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது, ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும் வருங்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றவர்களாகவும் திகழ ஆசிரியர்களின் வழிகாட்டலும், பெற்றோர்களின் அரவணைப்பும் மிக முக்கியம். அதோடு தமிழ்மொழிக் கல்வியை நிலைநிறுத்த, இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தமிழ்மொழியை தங்களது தேர்வுப் பாடமாக எடுக்க வேண்டும் என நான் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றேன்” என்றும் தனது அறிக்கையில் கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்