ஜோகூர்- திடீரெனப் பெய்த கனமழை காரணமாக திங்கட்கிழமை ஜோகூர் நகரம் பெருமளவு பாதிக்கப்பட்டது.
ஜோகூர் மக்களுக்கு வழக்கமான முறையில் திங்கட்கிழமை அலுவல்கள் தொடங்கின. எனினும் திடீரென காலை 11 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்துக் கட்டிய மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. போக்குவரத்தும் நிலைகுத்தியது.
குறிப்பாக ஜாலான் வோங் ஆ ஃபூக், ஜாலான் சுல்தான் இப்ராகிம் உள்ளிட்ட பகுதிகள் மோசமான பாதிப்புக்குள்ளாகின. நகரிலுள்ள பல முக்கிய கட்டடங்களின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள கார் நிறுத்தும் இடங்கள் எல்லாம் மழைநீரில் மூழ்கின.
சில மணிநேரங்களில் வெள்ளம் வடிந்தாலும், பல இடங்களில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மாலை வரை வாகனங்களால் ஊர்ந்து செல்ல மட்டுமே முடிந்தது என பலர் சமூக ஊடங்களில் தங்களது மழை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.