Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூர்-ஜோகூர்பாரு விரைவு இரயில் – 1 பில்லியன் ரிங்கிட் குத்தகைகள் வழங்கப்பட்டன  

சிங்கப்பூர்-ஜோகூர்பாரு விரைவு இரயில் – 1 பில்லியன் ரிங்கிட் குத்தகைகள் வழங்கப்பட்டன  

672
0
SHARE
Ad
Singapore Cause way

சிங்கப்பூர் : ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஆர்டிஎஸ் எனப்படும் (Johor Baru-Singapore Rapid Transit System – RTS) விரைவு இரயில் போக்குவரத்துத் திட்டத்துக்கான கட்டுமானங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதன் தொடர்பில் சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 9 குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அந்த விரைவு இரயில் போக்குவரத்து நிறுவனமான ஆர்டிஎஸ் ஓபரேஷன்ஸ் (RTS Operations) அறிவித்தது.

இந்தத் திட்டம் சிங்கப்பூரின் இரயில் நிறுவனமான எஸ்எம்ஆர்டி (SMRT), மலேசியாவின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான பிரசரனா ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டு நிறுவனமாகும்.

#TamilSchoolmychoice

சிங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனம் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த இரயில் போக்குவரத்தையும், ஜோகூர் பாருவில் அமைக்கப்படவிருக்கும் ஹானா டிபோட் (Hana depot) இரயில்கள் நிறுத்துமிடத்தையும் நிர்வகிக்கும்.

கடந்த ஜனவரியில் சிங்கையின் உட்லண்ட்ஸ் வடக்கு இரயில் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளும் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டன.

ஜோகூர் பாருவில் புக்கிட் சாகார் இரயில் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் கடந்த நவம்பரில் தொடங்கின. ஜோகூர் நீரிணைப் பகுதியை இந்தப் போக்குவரத்து இணைக்கும். சுரங்கப் பாதைகள் வழியான போக்குவரத்தை இந்த இரயில் சேவைகள் கொண்டிருக்கும்.

எதிர்வரும் 2026 இறுதியில் இந்த ஆர்டிஎஸ் போக்குவரத்துத் திட்டம் நிறைவுபெறும்போது ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் ஏற்பட்டு வரும் மக்கள் நெரிசலை இந்தத் திட்டம் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 பாதிப்புகள் இல்லாத காலகட்டத்தில் தினமும் சுமார் 300,000 மக்கள் சிங்கப்பூர்-ஜோகூர் பாரு இணைப்புப் பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்தத் திட்டம் நிறைவு பெறும்போது இந்த இரயில் போக்குவரத்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் 10 ஆயிரம் பயணிகளைப் பரிமாற்றம் செய்யும்.

இரண்டு இரயில் நிலையங்களுக்கும் இடையிலான பயணத்துக்கான நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

உட்லண்ட்சில் நிறுவப்படும் இரயில் நிலையம் வழக்கமான எம்ஆர்டி நிலையத்தை விட பத்து மடங்கு பெரியதாக நிர்மாணிக்கப்படும்.