கோலாலம்பூர் – மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை விடுவிக்க, இங்குள்ள முக்கியத் தலைவர்களைக் கடத்தி வைத்து, அதன் மூலம் அரசாங்கத்தை மிரட்டி காரியம் சாதிக்கலாம் என ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்ததை மலேசிய உளவுத்துறை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், மலேசியாவில் வைத்து இரண்டு ஐஎஸ் தீவிரவாதிகளைக் காவல்துறை கைது செய்தது. அவர்கள் தற்போது சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை விடுவிக்க முயற்சி செய்து வரும் ஐஎஸ் அமைப்பு, கிள்ளான் பள்ளத்தாக்கு அருகே அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களைக் கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் மலேசிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பிணை பிடிப்பு திட்டத்திற்குக் காரணம் சிறையில் இருக்கும் இரு தீவிரவாதிகளை விடுவிப்பது மட்டுமே என்றும், பிணைபிடித்து அதன் மூலம் அரசாங்கத்திடம் பணம் கேட்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை என்றும் புக்கிட் அம்மான் தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் பிரிவின் தலைமை மூத்த துணை ஆணையர் டத்தோ ஆயோப் கான் நேற்று தெரிவித்துள்ளார்.