கோலாலம்பூர் – பெர்னாட் தென்னை படுகொலை செய்த அபு சயாப் அமைப்பின் செயலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெர்னாட்டின் மரணத்தை அறிந்து அரசாங்கமும் அனைத்து மலேசியர்களும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளதாகவும், இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“இது போன்ற மிருகத்தனமான, காட்டுமிராண்டித் தனமான செயலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை வழங்க வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.”
“இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அதற்குப் பொறுப்பு வகிக்கும் முகமைகளுக்கும், அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறோம்”
“இறந்தவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் சண்டாக்கானில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் இருந்து அபு சயாப் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பெர்னாட் தென், நேற்று இரவு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.