Home Featured உலகம் மோடி சிங்கை இந்திய வம்சாவளியினரிடையே இந்தியில் உரை! இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!

மோடி சிங்கை இந்திய வம்சாவளியினரிடையே இந்தியில் உரை! இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!

862
0
SHARE
Ad

சிங்கப்பூர் – பிரதமரானது முதல், தான் செல்லும் நாடுகளில் எல்லாம் அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றி, அவர்களை உற்சாகப்படுத்துவதை இந்தியப் பிரதமர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அதன்வழி இந்திய நாட்டு மக்களுக்கும் சில செய்திகளை வழங்குவார் மோடி.

Modi-Singapore Indians-speechசிங்கை இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றும் மோடி…

நேற்றும் வழக்கம்போல் சிங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய மோடி முழுக்க, முழுக்க இந்தியில் உரையாற்றினார். ஆனால் சிங்கப்பூரின் மற்ற அரசாங்க நிகழ்ச்சிகளில் எல்லாம் மோடி ஆங்கிலத்திலேயே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அந்தக் கூட்டங்களில் எல்லாம் எந்தவித, எழுத்துப் பிரதியும் வைத்துக் கொள்ளாமலேயே சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றினார் மோடி. ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களில் மட்டும் ‘இந்திய வாடை’ அடித்தது என்பது தவிர, அவரது ஆங்கில உரைகள் அனைத்தும் பொருள் பொதிந்ததாகவும், அவர் சொல்ல வருகின்ற கருத்துக்களை மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணமும் அமைந்திருந்தன.

ஆனால், நேற்று அவரது உரையைக் கேட்க திரண்டிருந்து சுமார் 5,000 சிங்கை இந்திய வம்சாவளியினரிடையே மோடி முழுக்க முழுக்க இந்தியிலேயே உரையாற்றினார்.

சிங்கையில் மட்டும் ஏன் இந்தியில் உரை?

கோலாலம்பூரில் தமிழில் உரையைத் தொடங்கி, முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் உரையாற்றிய மோடி, சிங்கையில் மட்டும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கான காரணம் ஒன்றும் சொல்லப்படுகின்றது.

Modi-Singapore workers-visiting INAசிங்கப்பூரிலுள்ள இந்திய தேசிய இராணுவத்தின் நினைவு மையத்திற்கு நேற்று வருகை தந்த மோடி அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்களுடன் படம் எடுத்துக் கொண்ட காட்சி…

சிங்கை குடியுரிமை வைத்திருப்பவர்கள் யாருக்கும் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை என சிங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக, இந்தியாவின் “எகனாமிக் டைம்ஸ்” வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது. ஆனால், இது குறித்து தகவல் ஊடகங்கள் பெரிது படுத்த வேண்டாம், என சிங்கப்பூர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

சிங்கையைப் பொறுத்தவரை, ஒருவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுவிட்டார் என்றால், அவர் சிங்கப்பூரராகத்தான் பார்க்கப்படுகிறாரே தவிர, மலேசியா போன்று, இந்தியர், சீனர், மலாய்க்காரர் எனப் பார்க்கப்படுவதில்லை.

இதன் காரணமாகத்தான் சிங்கப்பூர் அதிகாரிகள், சிங்கை குடியுரிமை பெற்ற இந்தியர்களை, இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்தும் மோடியின் உரை நிகழ்ச்சியில் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக, இந்திய கடப்பிதழ் (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மோடியின் இந்திய வம்சாவளியினரிடையேயான உரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

எனவே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இந்திய கடப்பிதழ் கொண்ட இந்தியர்கள் என்ற காரணத்தினால்தான் மோடி இந்தியிலேயே உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் இந்தி மொழிக் கொள்கை காரணமா?

பாஜக அரசாங்கத்தின் இந்தி மொழிக் கொள்கையின் பிரதிபலிப்பாக செல்லுமிடமெல்லாம் முடிந்தவரை இந்தியில் உரையாற்றுவதை மோடி வழக்கமாக்கி வைத்துள்ளார். ஐக்கிய நாட்டு சபையில் உரையாற்றும்போது கூட மோடி இந்தியில்தான் உரையாற்றினார் என்பது கவனிக்கத்தக்கது.

இவையெல்லாம் தவிர, மற்றொரு முக்கிய காரணமும் மோடி இந்தியில் உரையாற்றுவதற்கான காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டில் மோடி நிகழ்த்தும் உரைகள் எல்லாம் நேரலையாக செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகின்றது. மோடி இந்தியில் உரையாற்றினால், அதற்கான இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் பெருகுகின்றது. குறிப்பாக வட மாநிலங்களில் அனைவரும் மோடி என்ன சொல்கின்றார் என்பதைக் கேட்கின்றார்கள். இதனால் மோடிக்கு இந்த உரைகள் ஒருவகையில் ஓர் அரசியல் பிரச்சார யுக்தியாகவும் பயன்படுகின்றது.

ஆனால், அதே உரை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்படும்போது, அதனை ஒளிபரப்ப இந்திய செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் மோடியின் இந்தி உரைக்கான மற்றொரு காரணமாக முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், அதே உரைகளை மோடி வெளிநாட்டில் ஆங்கிலத்தில் நிகழ்த்தும்போது அதற்கான தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடுகிறதாம்.

மலேசியாவில் மட்டும், இங்கு பெரும்பான்மையான மக்கள் தமிழர்கள் என்பதாலும், இங்கு தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் அதிகம் என்பதாலும், மோடிக்கு இது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தனது உரையைக் கேட்க வந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்பதைப் புரிந்து கொண்டதால்தான் –

கோலாலம்பூரில் அவரது உரை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் – திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டியும் – தமிழர்களை அதிகம் கவர்ந்த அப்துல் கலாம் குறித்த செய்திகளை உள்ளடக்கியும் – அமைந்திருந்தது என பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்

-இரா.முத்தரசன்