நியூ யார்க் – நட்பு ஊடகங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள பேஸ்புக் தனது அடிப்படை பணியையே ஒட்டுமொத்தமாக மாற்றி புதிய முயற்சி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது அமெரிக்காவில் பரிசீலனையில் இருக்கும் இந்த புதிய திட்டம் மிக விரைவில் உலக நாடுகளிலும் மேம்படுத்தப்பட இருக்கிறது.
அப்படி என்ன பரபரப்பான புதிய முயற்சி? என்று நீங்கள் கேட்டால், தலைப்பில் கூறியது தான். ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்த காதலர்களை ஒட்டுமொத்தமாக பிரிப்பது தான் அந்த புதிய முயற்சி. பொதுவாக பேஸ்புக்கில் உறவு நிலை (Relationship Status)-ஐ பயனர்கள் குறிப்பிடுவது வழக்கமான ஒன்று தான். காதலில் இருக்கும் காதலர்கள் தங்கள் துணையின் பெயரை பதிவு செய்து தங்கள் உறவு நிலையை குறிப்பிடுவர்.
ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தினால் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிய நேரிட்டால் பேஸ்புக்கில் தங்கள் உறவுநிலையை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பிட்ட தங்கள் முன்னாள் துணையுடன் ‘அன்பிரண்ட்’ (unfriend) அல்லது ‘பிளாக்’ (Block) தேர்வை தேர்வு செய்து அவர்களுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ளலாம். எனினும், நண்பர்கள் வட்டத்தின் மூலம் ஏதோ ஒரு வகையில் அவர்களுடன் தொடர்பிலேயே இருப்போம்.
இதனைத் தவிர்ப்பதற்காக பேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய வசதி, துண்டிப்பட்ட உறவின் சுவடுகளைக் கூட முற்றிலுமாக துண்டித்துவிடும். இதன் மூலம் முன்னாள் துணையின் எத்தகைய பேஸ்புக் சார்ந்த நடவடிக்கையும் பயனர்கள் கண்களில் படாது.
இது ஒருவகையில் ஏற்புடையதாக இருந்தாலும், பிரிந்த காதலர்கள் ஏதோ ஒரு வகையில் இணைவதற்கான வாய்ப்பினை முற்றிலும் தவிர்த்து விடும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.