கைப்பைகளுக்குரிய தொகையைச் செலுத்துமாறு அதை விற்பனை செய்த நிறுவனம் கேட்டபோது, தனக்கும் மலேசியப் பிரதமரின் குடும்பத்துக்கும் இடையேயான உறவு முறையைக் குறிப்பிட்டு மைரா மிரட்டல் விடுத்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-15 காலத்தில் பிரபல சமிலார் நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு டஜன் விலையுயர்ந்த ஆடம்பர வகை கைப்பைகளை வாங்கியுள்ளார் மைரா. அவற்றின் மதிப்பு சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் ஆகும். இதற்கான தொகையை அவர் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து சமிலார் நிறுவனத்தின் தலைவரான பெல்லா பெல்கின் இது தொடர்பாக மைராவை தொடர்பு கொண்டு, தொகையை செலுத்தாவிடில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகவும், இதனால் ஆவேசமடைந்த மைரா, தம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பெல்லா பெல்கினும் அவரது குடும்பத்தாரும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்ததாகவும் நியூயார்க் போஸ்ட் தெரிவிக்கிறது.
“என் மகன் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? மலேசியப் பிரதமரின் மருமகன். என் மீது வழக்குத் தொடுத்தால், நீங்கள் மட்டுமல்லாமல் உங்களது குடும்பமும் என்னால் பாதிக்கப்படுவீர்கள்,” என மைரா மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவரது வழக்கறிஞரை தொடர்பு கொண்டபோது எந்தவித விளக்கமும் கிடைக்கவில்லை என நியூயார்க் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
மைராவின் பின்னணியைப் பார்ப்போம். இவர் கசகஸ்தான் அதிபர் நுர்சுல்தான் நசார்பயேவின் சகோதரர் போலட் நசார்பயேவின் முன்னாள் மனைவி ஆவார். இவரது மகன் டானியார் கெசிக்பாயேவை தான் பிரதமர் நஜிப்பின் மகள் நூர்யானோ நஜ்வா மணந்துள்ளார்.
மைரா மற்றும் அவரது மகன் மீது, 20 மில்லியன் டாலரை மோசடி செய்ததாக மான்ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் போலட்.
இதற்கிடையே, மேற்கூறிய செய்தி குறித்து விளக்கம் கோரி பிரதமர் துறைக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருப்பதாகவும், உரிய பதிலுக்காக காத்திருப்பதாகவும் மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.