சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில், அவருக்கு எதிர்மறையான கருத்துக்களே அதிகம் பதிவாகி உள்ளதால் அதிமுக வட்டாரம் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளது.
2016 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ‘விஷன் – 234’ என இலக்கு நிர்ணயித்து அதிமுக தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தொடங்கி விட்டது.
இந்நிலையில் தான், ஜூனியர் விகடன் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தியது. குறிப்பிட்ட அந்த கணக்கெடுப்பில், முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடு மிக நன்று (சூப்பர்) என 27.95 சதவீதம் பேரும், சுமார் என 39.37 சதவீதம் பேரும், மோசம் என 16.22 சதவீதம், மிகவும் மோசம் என 16.46 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவராக கருணாநிதிக்கு 41.70 சதவீதம் பேரும், விஜயகாந்திற்கு 13.81 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
திமுகவிற்கு சாதகமாகவும், ஆளும் கட்சிக்கு எதிராகவும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ள ஜூ.வி இதழை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.