கோலாலம்பூர் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவை விட்டுப் புறப்பட்டுவிட்டாலும், அவர் வீசிச் சென்ற ‘மோடி அலை’ இங்குள்ள உயர்மட்டத் தலைவர்களை இன்னும் வியப்பில் இருந்து விடுவிக்கவில்லை.
நேற்று மஇகா தலைமையகத்தில் பேசிய மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவி டத்தின் ரோஸ்மா மன்சோர், நரேந்திர மோடியிடமிருந்து தேர்தல் வியூகம் உட்பட பல்வேறு விசயங்களை நமது தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களைச் சென்றடைய மோடி பயன்படுத்திய நட்பு ஊடகங்களின் வழிப் பிரச்சாரம் மிகச் சிறப்பாகக் கை கொடுப்பதாக ரோஸ்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் நேரத்தில் இருந்து தற்போது வரை மோடி மற்றும் அவரது குழுவினர், பேஸ்புக், டுவிட்டர் உட்பட பல்வேறு நட்பு ஊடகங்களின் வழி மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர்.
“சுப்ரா, நீங்கள் இந்தியாவிற்குச் சென்று அவர்கள் எப்படி அதனை வழிநடத்துகிறார்கள் என்று அறிந்து வருவது நல்லது” என்று ரோஸ்மா தெரிவித்துள்ளார்.
“14-வது பொதுத்தேர்தலில் நீங்களும் அவரது முறையைப் பின்பற்றலாம். நான் அவரது பிரச்சாரங்களைப் பின்பற்றி வருகிறேன். அவரது பிரச்சாரங்களில் ஒரு முறை இருக்கிறது”
“குறிப்பாக நட்பு ஊடகங்கங்கள். நட்பு ஊடகங்கள் மிகவும் முக்கியம் மற்றும் அதனை எப்படி பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியப் பிரதமருக்கு அது மிகவும் வெற்றிகரமாக அமைந்தது” என்று ரோஸ்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேசிய முன்னணியைப் பொருத்தவரையில், நஜிப் பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் ‘இருக்கிறார்’. ஆனால், மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாரா? என்றால் அது கேள்விக்குறியே.
அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும், அறிக்கைகளும் மிகத் தாமதமாகவே வந்து கொண்டிருப்பது அவரை நட்பு ஊடகங்களின் வழிப் பின்பற்றி வருபவர்களுக்குத் தெரியும்.
அண்டை நாடான சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங் கூட பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில், தாமே நேரடியாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்வதோடு, மக்களோடு, மக்களாக நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றார்.
நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில், அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால், அந்த நிகழ்ச்சி பற்றிய தகவலை அவரது பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் உடனுக்குடன் தெரிவிக்க அதற்கென்றே ஒரு குழுவை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்த 14-வது பொதுத்தேர்தலில், மோடி வழியில் நட்பு ஊடகங்களில் கவனம் செலுத்த தேசிய முன்னணி தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதிலிருந்தே தலைவர்களின் பேஸ்புக் பக்கங்களும், வலைத்தளங்களும் களைகட்டத் தொடங்கினாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
-செல்லியல் தொகுப்பு