சிங்கப்பூர் – நவம்பர் 25 – ஆசியான் மாநாடு – கிழக்கு ஆசியா மாநாடு – மலேசிய வருகை என மூன்று நாட்களுக்கு மலேசித் தலைநகர் கோலாலம்பூரையே சுற்றி வந்து ஒரு கலக்கு கலக்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமை மாலை கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு, சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.
அடுத்த ஒரே நாளில் விறுவிறுவென பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புதுடில்லி திரும்பினார் மோடி.
அவரது சிங்கப்பூர் வருகையின் சில காட்சிகள் – செய்திகளுடன்:-
திங்கட்கிழமை மாலை சிங்கை வந்தடைந்த மோடி – சிறப்பு வரவேற்பு அறையில்….
சிங்கப்பூர் வந்தடைந்த உடனேயே அன்றிரவு 8.00 மணிக்கு, தென்கிழக்காசிய கல்வி ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில், சிங்கப்பூர் விரிவுரை என்ற வரிசையில் 37வது உரையை சிங்கப்பூர் ஷங்ரிலா தங்கும் விடுதியில் மோடி நிகழ்த்தினார். ‘இந்தியாவின் சிங்கப்பூர் கதை’ என்பதுதான் மோடி ஆற்றிய உரையின் தலைப்பாகும். இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் பங்கு பெற்றது எப்படி இன்று வரை பங்களித்து வருவது எப்படி என்பது குறித்து மோடியின் உரை அமைந்தது.
மோடி சிங்கப்பூர் விரிவுரையை நிகழ்த்திய பின்னர் அந்த உரையை செவிமெடுக்க வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங், மோடியை அழைத்துச் சென்று இரவு உணவு விருந்தளித்தார். பிரதமராக இருந்தாலும், பெரிய, ஆடம்பர தங்கும் விடுதிக்கு எங்கும் அழைத்துச் செல்லாமல், (மோடியும் சைவப் பிரியர் என்பதால்) எளிமையான, ஆனால் சுவையான, சைவ உணவுக்குப் பெயர் பெற்ற கோமளவிலாஸ் உணவகத்திற்கு மோடியை அழைத்துச் சென்றார் லீ சியன் லுங்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே தனது பணிகளைத் தொடக்கினார் மோடி. காலை உணவுடன், சிங்கப்பூரின் முக்கியப் பிரமுகர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் மோடி.
சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நரேந்திர மோடிக்கு இராணுவ மரியாதையுடன் அதிகாரபூர்வ வரவேற்பு நல்கப்படுகின்றது
சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம்-முடன் சந்திப்பு நடத்தும் நரேந்திர மோடி…
சிங்கையின் முன்னாள் பிரதமரும், மூத்த வழிகாட்டுதல் அமைச்சருமான கோ சோக் தோங்கை மோடி சந்தித்தார். இந்தியாவில் ஏராளமான முதலீடுகளுடன் இன்றைக்கு முன்னணியில் சிங்கப்பூர் இருப்பதற்கு கோ சோக்தான் காரணம் என்று மோடி தனது சிங்கப்பூர் விரிவுரையின்போது புகழாரம் சூட்டியிருந்தார்.
சிங்கப்பூருடன் பல்வேறு அம்சங்கள் மீதிலான வியூக உடன்படிக்கைகளில் மோடியும், சிங்கை பிரதமர் லீ சியல் லுங்கும் கூட்டாக கையெழுத்திட்டனர்.
மோடி வருகையை முன்னிட்டு, இந்திய அதிபர் மாளிகையான ராஷ்டிரபதி பவன், சிங்கை அதிபரின் மாளிகையான இஸ்தானா ஆகியவற்றைக் கொண்ட சிறப்பு அஞ்சல் தலைகளை இரண்டு பிரதமர்களும் வெளியிட்டு, பரிமாறிக் கொண்டனர்.
மோடி வருகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலைகள் – இந்திய அதிபர் மாளிகையான ராஷ்டிரபதி பவன், சிங்கை அதிபரின் மாளிகையான இஸ்தானா ஆகியவற்றைக் காட்டுகின்றன.
இந்தியா-சிங்கப்பூர் இடையிலான பொருளாதார மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டு சிங்கை முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
சிங்கை பிரதமர் லீ சியன் லுங் தொகுதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிக்கு மோடி பிரதமர் லீயுடன் இணைந்து வருகை தந்தார். அப்போது அவருக்கு தமிழர்களின் மேளதாளத்துடனும், மற்ற இனங்களில் பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி, பிரதமர் லீ இருவருக்கும் தொழில்நுட்பக் கல்லூரி வளாக வசதிகள் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விளக்கங்கள் வழங்கப்படுகின்றது.
இந்திய தேசிய இராணுவத்தின் நினைவு மையத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்துகின்றார் மோடி…
இந்திய தேசிய இராணுவத்தின் நினைவு மையத்திற்கு வருகை தந்த மோடி – அங்கு அருகில் பணியில் இருந்த இந்திய கட்டுமானத் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தனது வழக்கமான பாணியில் சிங்கையில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரையாற்றினார்.
ஒரே நாளில் சூறாவளி சுற்றுப்பயணமாக அமைந்த தனது சிங்கப்பூர் வருகைக்குப் பின்னர் விடைபெற்றுச் செல்லும் மோடி…
-செல்லியல் தொகுப்பு