Home Featured நாடு “என் வாயை யாராலும் மூட முடியாது” – மொகிதின் யாசின் சூளுரை!

“என் வாயை யாராலும் மூட முடியாது” – மொகிதின் யாசின் சூளுரை!

663
0
SHARE
Ad

கோலாலம்பூர்- எது செய்தாலும் தனது வாயை யாராலும் மூட முடியாது என்றும் தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருவேன் என்றும் அம்னோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அம்னோ இளையர், மகளிர், புத்ரி பிரிவு மாநாடுகளை கட்சித் துணைத் தலைவர் துவக்கி வைக்கமாட்டார் என அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில், மொகிதின் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tan-Sri-Muhyiddin-Yassinகடந்த ஆறு ஆண்டுகளாக அம்னோ துணைத் தலைவராக பதவி வகித்து வரும் தாம், அம்னோ இளையர், மகளிர், புத்ரி பிரிவு மாநாடுகளைத் துவக்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நாடு முழுவதிலும் இருந்து வரும் பேராளர்கள் மத்தியில் மாநாட்டின் துவக்கத்தில் உரையாற்றி உள்ளேன். துணைத் தலைவர் என்ற வகையில் எனது அந்த உரைகள் முக்கியமானவை. பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அம்னோ வலுவாக உள்ளது என்ற நம்பிக்கையை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் அந்த உரைகள் இருக்கும். தற்போது இந்த மாநாடுகளில் நான் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் துணைத் தலைவர் என்ற வகையில் நான் ஆற்றக்கூடிய அந்த உரைகள் எனக்கு மிகுந்த அர்த்தமுள்ளவை. இந்நிலையில் நான் உரையாற்றுவதை தடுக்க முயற்சிப்பதாகத் தோன்றுகிறது. சில தரப்பினர் நான் உரையாற்றுவதை தடுக்க முயற்சிப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் மொகிதின் கூறியுள்ளார்.

“கட்சி கடைப்பிடிக்கும் மரபின்படி நான் உரையாற்றுவதை தடுக்கும் வகையில், துணைத் தலைவர் என்ற முறையில், நான் அப்படியென்ன பாவம் செய்துவிட்டேன்? இளம் தலைவர்கள் மத்தியில் நான் பேசக்கூடிய விஷயங்களால், குறிப்பிட்ட தலைவர் மீது இளையர்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்துவிடும் எனக் கருதுகிறார்களா?” என மொகிதின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்னோ உச்சமன்றத்தின் முடிவை தாம் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திர நாட்டில் யாரும் என்னை வாய்மூடவோ, மவுனப்படுத்தவோ இயலாது என்பதை குறிப்பிட்ட தரப்பினருக்கு தெரிவிக்க விரும்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

“எது சரியெனப்படுகிறதோ அதைத் தொடர்ந்து சொல்வேன். அம்னோவில் எனது போராட்டமானது யாரையும் தற்காப்பதற்கானது அல்ல. நாட்டின், இனத்தின், மதத்தின் வளர்ச்சியே முக்கியம்” என மொகிதின் மேலும் தெரிவித்துள்ளார்.