புது டெல்லி – அமீர்கான் இந்தியாவில் மதசகிப்புத்தன்மை பற்றி விமர்சித்துக் கூறிய கருத்தால், நாடெங்கிலும் அவருக்கு கண்டனக் குரல்கள் பெருகி வரும் நிலையில், பலர் அவர் விளம்பரப்படுத்திய பொருட்களை புறக்கணித்து தங்கள் எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர்.
இதனால் அவர் விளம்பரத் தூதுவராக இருந்த ஸ்னாப்டீல், சாம்சங், டைடன், டாடா ஸ்கை உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக எதிர்பார்த்திராத அளவு வர்த்தக பாதிப்பை சந்தித்துள்ளன.
அமீர்கானுக்கு பெரும் விலை கொடுத்து தங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமித்த ஸ்னாப்டீல் நிறுவனம், அமீர்கானின் கருத்துக்கு தங்கள் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.
“அமீர்கான் சொன்ன கருத்துக்கு எந்த விதத்திலும் ஸ்னாப்டீல் பொறுப்பேற்காது. மேலும் இதில் எங்கள் தலையீடும் கிடையாது. ஸ்னாப்டீல் இந்தியாவின் நிறுவனம் என்பதில் பெருமையுடன் தொடர்ந்து பணியாற்றும்” என அந்நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்னாப்டீல் பதறி அடித்துக் கொண்டு இந்த விளக்கத்தைக் கொடுக்க காரணம், அமீர்கான் கருத்துகூறி ஒரே நாளில் லட்சக்கணக்கான பயனர்கள் ஸ்னாப்டீல் செயலியை நீக்கி தங்கள் எதிர்ப்பைக் காட்டியது தான்.
மேலும் டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில், அமீர்கான் விளம்பரப்படுத்தும் பொருட்களுக்கு மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அமீர்கானின் விளம்பரத் தூதுவர் என்ற அந்தஸ்தை திரும்பப் பெறலாமா? என்று ஆலோசனை நடத்தி வருகின்றன.