மார்ச் 13 – “ஹிண்ட்ராப் இயக்கம் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முன்வரவேண்டும்” என ஹிண்ட்ராப்பின் முன்னோடிகளில் ஒருவரும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹிண்ட்ராபின் ஐந்து தலைவர்களில் ஒருவருமான ஆர். கெங்காதரன் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹிண்ட்ராபின் இன்றைய நிலை குறித்து, ஜனநாயக செயல் கட்சியின் (ஜ.செ.க) தலைவர்களில் ஒருவரான குலசேகரன் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, நேற்று ஹிண்ட்ராப் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.ரமேஷ் பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த இருவரின் விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு கங்காதரன் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியர் உரிமையில் ஹிண்ட்ராப்புக்கே ஏகபோக உரிமையா?
தனது அறிக்கையில் கெங்காதரன் மேலும் கூறியிருப்பதாவது:
“ஹிண்ட்ராப்பின் தற்போதைய நிலை என்னவென்றால் இந்தியர் உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமை உண்டு என்பது போலவும் எனவே இந்திய வாக்குகளைப் பெற விரும்பும் எந்த ஓர் அரசியல் கட்சியும் தங்களுடன்தான் முதலில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற தோரணையிலும் அவர்கள் நடந்து கொள்கின்றார்கள். இந்த ஆதங்கத்தைத்தான் குலசேகரனும் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்”
“இதன் காரணமாக ஹிண்ட்ராப் மலேசிய இந்திய சமூகத்தினருக்காகச் செயல்படுவதில் மிகவும் அகந்தை கொண்டிருப்பதாகவும், இதனால் பொதுத்தேர்தலில், மற்ற கட்சிகளைச் சார்ந்த இந்தியத் தலைவர்கள் வாக்குகளை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் குலசேகரன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்” என்றும் கங்காதரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
“எனது கருத்துப்படி, கடந்த ஆறு மாதங்களாக பி.கே.ஆர் அல்லது ஜ.செ.க கட்சியினர் தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் இந்திய சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் இந்தியர்களிடம் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றனர். இந்தியர்களும் அவர்களுக்கு ஆதரவு காட்டி வருகின்றனர். இதனால், தற்போது இந்திய மக்களிடையே நிலவி வரும் பல பிரச்சனைகளின் காரணமாக, மலேசிய இந்திய சமூகத்தினர் 2007 ஆம் ஆண்டு முதல் ஹிண்ட்ராப் மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட்டு விலகி, எதிர்க்கட்சிகளை நோக்கிச் செல்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை” என்றும் கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
“ஹிண்ட்ராப் அரசியல் பிடியில் சிக்கக் கூடாது”
மேலும் அவர் கூறுகையில், ” ஹிண்ட்ராப் இதை உணர்ந்து எந்த அரசியல் கட்சியின் பிடியிலும் சிக்காமல், கடந்த 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்திய வரலாற்றுபூர்வமான பேரணியில் அத்தனை மலேசிய இந்தியர்களையும் ஒன்றிணைத்தது போல், அதன் தனிப்பட்ட வழியில் தொடர்ந்து இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அத்துடன் தனது சொந்த பலத்தின் மீது அதிக நம்பிக்கையும், மதிப்பீடும் கொள்வதை விடுத்து ஒரே கொள்கைகளுடைய மற்ற கட்சியினருடன் இணைந்து, அதன் இலக்கை நோக்கிச் செயல் பட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மலேசிய இந்திய சமுதாயத்தினரின் வாக்குகள் பிற கட்சிகளுக்கு பிரிந்து செல்லாமல் அனைவரையும் ஒன்றுபடுத்தி முன்னேற்றப் பாதைகளை வழி வகுத்து நாம் முன்னோக்கி செல்ல முடியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்தியர்கள் அடுத்த கட்ட அரசியலுக்கு முன்னோக்கி செல்ல வேண்டும்”
“இன்றைய சூழ்நிலையில் இந்தியர்கள் அடுத்த அரசியல் கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல தயாராகி விட்டார்கள். இன அடிப்படையில் குறுகிய மனப்பாங்குடன் இனியும் போராடிக் கொண்டிருக்காமல் அனைவருக்கும் பொதுவான திட்டங்கள் என்ற அடிப்படையில் போராடுவதன் மூலமே – அந்த வழியில்தான் – பொதுத் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முன்வந்திருக்கின்றார்கள். இந்த சரித்திரபூர்வமான தருணத்தை தவறவிட அவர்கள் விரும்பவில்லை. ஹிண்ட்ராப்பும் இதை உணர்ந்து செயல்படுவது நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் கடந்த காலங்களில் 2007 ஆம் ஆண்டு பேரணியைத் தொடர்ந்து சாதித்த சாதனைகள் பயனில்லாமல் போய்விடும்” என்றும் கெங்காதரன் குறிப்பிட்டுள்ளார்.
“சிறுபான்மையினர் எப்போதும் தங்களைப் பற்றியும் தங்களில் பலத்தைப் பற்றியும் அளவுக்கதிகமாக எடைபோட்டுக் கொள்ளக்கூடாது. மாறாக ஒரே சிந்தனையுடைய மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் இணைந்து போராடி தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெறவேண்டும். ஹிண்ட்ராப்பும் இதை உணராமல் போய்விட்டால் எதிர்காலத்தில் வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்ட நிந்தனைக்கு அவர்கள் ஆளாவார்கள்” என்று கங்காதரன் தனது அறிக்கையில் ஆணித்தரமாக கூறியுள்ளார்.