கோத்தாகினபாலு – சபா மீது தாக்குதல் தொடுத்த சூலு சுல்தானின் மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுருல் இசா, தியான் சுவா இருவரும் சபா மாநிலத்தில் நுழைவதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் ஒன்றை இன்று சபா சட்டமன்றம் நிறைவேற்றியது.
சபா துணை முதல்வர் டத்தோ ரேமண்ட் தான் ஷூ கியா முன்மொழிந்தஇந்த தீர்மானத்தை சபா முதல்வர் மூசா அமான் வழி மொழிந்தார்.
இதன் மூலம், இந்த சர்ச்சையைப் பயன்படுத்தி இந்த இருவரையும் சபாவிற்குள் நுழைவதிலிருந்து தடை செய்வதற்கு அந்த மாநில அம்னோ கட்சி வெற்றி கண்டுள்ளது.
14வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டே ஆண்டுகள் இருக்கும் நிலையில், நுருல் இசா, தியான் சுவா சபாவிற்குள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுமானால், அது எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகின்றது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் சபா மாநிலம் ஆராயும்.
சபா மீது ஊடுருவல் தாக்குதல் நடத்தியவர் சூலு சுல்தான், பல மலேசியர்கள் மரணமடைய காரணமாக இருந்தவர் அவர். அவரது மகள் ஜேசல் கிராம்முடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் சபாவின் முதல்வர் சாடியுள்ளார். சூலு சுல்தானின் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டவர் யாராக இருந்தாலும் சபாவில் நுழைவதற்குத் தடை செய்யப்படுவர் என்றும் சபா முதல்வர் எச்சரித்துள்ளார்.