கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிராமை சந்தித்தது தொடர்பிலான ஆதாரங்களை காவல்துறையிடம் அளித்துள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா. இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவர் தமது வழக்கறிஞர் ஆர்.சிவராசாவுடன் புக்கிட் அமான் வந்திருந்தார்.
புக்கிட் அமான் காவல் நிலையத் தலைமையகத்திற்கு முன்னால் தனது வழக்கறிஞர் சிவராசாவுடன் நூருல் இசா (மலேசியாகினி வெளியிட்ட டுவிட்டர் படம்)
இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவராசா, காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், இதன் பின்னர் ஜேசல், நூருல் இசா சந்திப்பு விவகாரம் முடிவுக்கு வரும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
“இது அதிகாரப்பூர்வ விசாரணை அல்ல என்றும், தாங்கள் தற்போது தகவல்களை மட்டுமே சேகரிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. என்னைப் பொறுத்தவரை அவர்கள் (காவல்துறை) எதிர்பார்த்த தகவல் கிடைத்துவிட்டது என்பேன்” என்றார் சிவராசா.
அக்குறிப்பிட்ட சந்திப்பானது மணிலா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் நிகழ்ந்தது என்று குறிப்பிட்ட நூருல் இசா, அந்நிகழ்வு தொடர்பான எந்த விஷயமும் மறைக்கப்படவில்லை என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக தாம் வருத்தமடைந்துள்ளதாகவும், காவல்துறையுடன் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள், புகைப்படங்கள் வழி தெளிவு பிறக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
“ஜேசல் கிராமை நான் சந்தித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க தயாராக உள்ளேன். நாடாளுமன்றம் நான் சொல்வதைக் கேட்கட்டும். இவ்விஷயத்தை நாடாளுமன்றத்தின் “சிறப்பு சலுகைகள் குழு” (Committee of Privileges) வரை கொண்டு செல்லத் தேவையில்லை” என்று நூருல் இசா மேலும் தெரிவித்தார்.