கோலாலம்பூர் – மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மஇகா மத்திய செயற்குழு நியமனங்களை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஒத்தி வைத்துள்ளார்.
மஇகா மத்திய செயலவைக்கு 9 உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவர் கொண்டிருந்தாலும், இன்றைக்கு இரண்டு பேரை மட்டுமே சுப்ரா நியமித்துள்ளார்.
தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த டத்தோ எம்.சரவணன், தேசிய உதவித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த டத்தோ வி.எஸ்.மோகன் ஆகிய இருவர் மட்டுமே தற்போது மத்திய செயலவை உறுப்பினர்களாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 7 நியமன உறுப்பினர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பழைய பொறுப்பாளர்களே தொடர்கின்றனர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைமைச் செயலாளர், தலைமைப் பொருளாளர் பதவிகளில் மீண்டும் பழையவர்களே தொடர்கின்றனர்.
மத்திய செயலவை உறுப்பினரும், பூச்சோங் தொகுதித் தலைவருமான அ.சக்திவேல் (படம்) தலைமைச் செயலாளராகத் தொடர்கின்றார்.
தேசிய உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், டத்தோ ஜஸ்பால் சிங் (படம்) தொடர்ந்து தலைமைப் பொருளாளராக செயல்படுவார் என்றும் சுப்ரா அறிவித்துள்ளார்.
தகவல் பிரிவுத் தலைவராக டத்தோ வி.எஸ்.மோகனே மீண்டும் தொடர்கின்றார். தகவல் பிரிவுத் தலைவர் மத்திய செயற்குழு உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் அவர் மத்திய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மஇகாவின் பல நிர்வாகப் பணிகள் இன்னும் முடிவடையாமல் இருக்கின்றன என்பதால், இதுவரை அந்தப் பணிகளைக் கவனித்து வந்த பழையவர்களே மீண்டும் தொடர்வதன் மூலம், அந்தப் பணிகளை சிக்கலின்றி நிறைவு செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தான் பழையவர்களையே தேசியத் தலைவர் நியமித்துள்ளார்.
தற்போதைய நியமனங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளன என்றும் அடுத்த இரண்டு மாதங்களில் முழுமையான நியமனங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.