சென்னை – தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பெரும் களேபரங்களே வெடித்த நிலையிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, தற்போது டாஸ்மாக் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
2016-ம் ஆண்டு தொடங்குவதற்கு ஏறக்குறைய ஒரு மாதமே உள்ள நிலையில், புது வருடத்தின் முதல் மாதத்தில் இருந்து டாஸ்மாக் செயல்படும் நேரம் குறைக்கப்படும் என தெரியவருகிறது. தமிழக அரசு டாஸ்மாக் நேரத்தை பகல், 2:00 முதல் இரவு, 10:00 மணி வரை என, எட்டு மணி நேரமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எனினும், அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
ஆண்டு ஒன்றிற்கு சுமார் 20 ஆயிரம் கோடி வருமானத்தை கொட்டிக் கொடுத்த டாஸ்மாக் தான் தமிழகத்தில் பல்வேறு இலவச திட்டங்களுக்கு உயிர் அளித்து வருகிறது. நிதி நிலையை காரணம் காட்டி இதுவரை டாஸ்மாக் தடை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த தமிழக அரசு, தற்போது முதல் முறையாக நேரக் குறைப்பிற்கான நடவடிக்கையை முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அரசு எடுத்துள்ள இந்த முடிவின் பின்னணியில் 2016 தேர்தல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.