Home Featured நாடு “மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்?” – நஜிப்புடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக சுப்ரா உறுதி!

“மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்?” – நஜிப்புடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக சுப்ரா உறுதி!

616
0
SHARE
Ad

Saravanan-Devamany Comboகோலாலம்பூர் – நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் மஇகாவுக்குக் கிடைத்த இரண்டு அமைச்சர்கள் பதவிகள் தற்போது மீண்டும் ஒரே அமைச்சராக சுருங்கிவிட்டது. இந்த ஆண்டில் பழனிவேல் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மஇகாவைச் சேர்ந்த வேறு யாரும் இதுவரை முழு அமைச்சராக நியமிக்கப்படாதது மஇகாவில் ஒரு நெருடலாகவேத் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், இன்று கூடிய மத்திய செயலவைக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் நஜிப்பிடம் விடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

35 ஆண்டுகளாக கிடைக்காத ‘இரண்டு அமைச்சர்கள்’ வாய்ப்பு

#TamilSchoolmychoice

நமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் என இரண்டு அமைச்சர்கள் மஇகா சார்பாக அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தார்கள்.

subra-and-palaniமாணிக்கவாசகம் 1973ஆம் ஆண்டில் தேசியத் தலைவரானதும், அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் கட்சியின் தேசியத் துணைத் தலைவரான டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இரண்டாவது அமைச்சராக, அதுவும் சட்டத் துறை அமைச்சராக அரசாங்கத்தில் இடம் பெற்றார்.

1976ஆம் ஆண்டில், ஆதிநாகப்பன் அகால மரணமடைந்ததன் பின்னர், அவருக்குப் பதிலாக இரண்டாவது அமைச்சராக மஇகாவின் சார்பில் யாரும் நியமிக்கப்படவில்லை.

தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் சார்பில் பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், மஇகா பொதுப் பேரவைகளில் ஆண்டுதோறும் பேராளர்கள் வலியுறுத்தி வந்தாலும், பிரதமர்கள் மாறினாலும், மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் கிடைக்கவே இல்லை.

2010ஆம் ஆண்டில் பழனிவேல் தேசியத் தலைவரான கால கட்டத்தில் டாக்டர் சுப்ரமணியம் மட்டுமே முழு அமைச்சராக இருந்தார்.

2011ஆம் ஆண்டு மஇகா பொதுப் பேரவையில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நஜிப், மஇகாவுக்கு இரண்டு அமைச்சர்கள் வழங்குவதாக அறிவித்தார். அதன்வழி பழனிவேல், சுப்ரா இருவருமே 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மஇகாவின் சார்பில் முழு அமைச்சர்களாயினர்.

ஆனால், தொடர்ந்து கடந்த ஓராண்டாக நடந்த கட்சிப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பழனிவேல் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதற்குப் பின் அவருக்குப் பதிலாக இதுவரை யாரும் மஇகா சார்பாக நியமிக்கப்படவில்லை.

இரண்டாவது முழு அமைச்சர் யார்?

இன்று, அந்த இரண்டாவது அமைச்சர் பதவி மஇகாவுக்கு வழங்கப்பட நஜிப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என சுப்ரா கூறியுள்ளதைத் தொடர்ந்து யார் அந்த இரண்டாவது அமைச்சர் என்ற கேள்வியும் இயல்பாகவே தொடர்ந்து எழுகின்றது.

அவ்வாறு மஇகா சார்பில் இரண்டாவது அமைச்சர் பதவி வழங்கப்பட்டால்,

இப்போது இருக்கும் இரண்டு துணை அமைச்சர்களான சரவணன், கமலநாதன் இருவரில் ஒருவர் முழு அமைச்சராகப் பதவி உயர்வு பெறலாம்.

அல்லது, கட்சியின் புதிய தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.கே.தேவமணி செனட்டராக நியமிக்கப்பட்டு முழு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு