கோலாலம்பூர்- சார்லஸ் மொராயிஸ் ஒரு கோழை என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் (படம்) சாடியுள்ளார். தனது சகோதரர் கெவின் மொராயிஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சத்தியப்பிரமாணமும் அளித்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறிய சார்லஸ் பொறுப்பற்ற மனிதர் என்றும் அபுபாக்கர் விமர்சித்தார்.
“அவர் (சார்லஸ்) மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டார். தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பின்னர் அவர் ஜோகூர்பாரு வழியாக வெளியேறியுள்ளதை உறுதி செய்துள்ளோம். குற்றவியல் நடைமுறை பிரிவுகளின்கீழ், துரோகம் செய்யும் நோக்கத்துடன் அவர் பல தகவல்களை வெளியிடவில்லை என்ற வகையில் அவர் மீதான விசாரணை நடைபெறுகிறது. அவர் பொறுப்பற்ற மனிதர். ஒரு குற்றச்சாட்டை எழுப்பிவிட்டு, நாட்டை விட்டு ஓட்டம் பிடிக்கிறார். அவரெல்லாம் என்னவொரு மனிதர்?” என்று அபுபாக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது சார்ல்சின் (படம்) இருப்பிடம் குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் சார்ல்சின் வழக்கறிஞரது உதவி கோரப்படும் என்றார்.
இந்நிலையில், சார்லசின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க தமது உதவி காவல்துறைக்கு தேவையில்லை என அவரது வழக்கறிஞர் அமரிக் சித்து கூறியுள்ளார்.
“சார்லஸ் அளித்த சத்தியபிரமாணத்தை காவல்துறை படித்துப் பார்க்கட்டும். அதன் முதல் பத்தியிலேயே சார்ல்சின் அட்லாண்டா முகவரி உள்ளது. பிறகு எதற்கு என் உதவி தேவைப்படுகிறது?” என அமரிக் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.