பெட்டாலிங் ஜெயா-ஐந்து ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரை விடுவிக்க வேண்டும் என பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசன் (படம்) வலியுறுத்தியுள்ளார்.
அன்வார் குறித்த தனது கடந்தகால விமர்சனங்களையும் மீறி, இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் அன்வாரை விடுதலை செய்யக் கோரும் பிரசாரத்தில் கைருடினும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அன்வார் கடந்த காலத்திலேயே தண்டிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
“மலேசியாவின் அரசியல் களம் மாறவும், மேலும் பிரகாசமடையவும் அன்வார் விடுலை செய்யப்பட வேண்டும். நாடு ஒழுங்காக நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் இப்ராகிம் முக்கிய பங்களிப்பைத் தர வேண்டியுள்ளது. அதன் மூலம் நாட்டின் நிர்வாகமானது சரியான திசையில்தான் செல்கிறதா என்பதை கண்காணிக்க இயலும்.” என்றும் அவர் மேலும் கூறினார்.
“மலேசியாவை கட்டியெழுப்பும் பணியில், எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி செயல்படக்கூடிய தீவிரமான எதிர்க்கட்சி தேவை. மலேசியாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் அனைத்து மலேசியர்களும் ஒருங்கிணைந்து, ஒருமுகமாக செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது,” என்று கைருடின் தெரிவித்துள்ளார்.
எனவே அன்வாரை விடுவிப்பதற்கான பிரசாரத்திற்கு எனது முழு ஆதரவை அளிக்கப் போவதாக கைருடின் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.