புது டெல்லி – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்புத் தீர்ப்பை வழங்கி உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், “ராஜீவ் கொலை குற்றவாளிகளை CRPC 435(1) பிரிவில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கே உள்ளது.”
“அதோடு ஆயுள் தண்டனை காலத்தை குறைக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கு இல்லை, ஆயுள் தண்டனை குறிப்பிட்ட வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டால், அதனை குறைக்க முடியாது” என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 24 ஆண்டுகளாக சிறையில் கழித்த ராஜீவ் கொலைக் குற்றவாளிகள், எப்படியும் விடுதலை கிடைத்து விடும் என்று எண்ணி இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கி உள்ள தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.