கோலாலம்பூர் – கேஎல்ஐஏ விரைவு இரயில் சேவையின் விலையை, ‘பகல் கொள்ளையாக’ 35 ரிங்கிட்டில் இருந்து 55 ரிங்கிட்டாக உயர்த்தியதைத் தடுத்து நிறுத்தாதது ஏன்? என போக்குவரத்துத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய் விளக்கமளிக்க வேண்டும் என ஜசெக செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் கியான் மிங் வலியுறுத்தியுள்ளார்.
“கேஎல்ஐஏ 2 விமான நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, விரைவு இரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக 2014 ஆண்டுக் கடைசியில் 6 புதிய இரயில்கள் வாங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றால் லாபமும் அதிகரித்திருக்கும்.” என்று ஆங் கூறியுள்ளார்.
“மேலும், கேஎல்ஐஏ 2 விரிவாக்கத்திற்குத் தேவையான கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கம் 100 மில்லியன் ரிங்கிட் கொடுத்துள்ளது என்பதை பொதுமக்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன். அதன்படி பார்த்தால், ஒரு சின்ன முதலீடு கூட செலவு செய்யாமல் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டுள்ளது” என்றும் ஆங் தெரிவித்துள்ளார்.