Home Featured நாடு பழனிவேல் தரப்பில் கடும் பிளவு – பழனிவேல் புறக்கணிக்கப்பட்டதால் நேரடியாக கட்சிக்குத் திரும்ப கிளைகள் ஆர்வம்!

பழனிவேல் தரப்பில் கடும் பிளவு – பழனிவேல் புறக்கணிக்கப்பட்டதால் நேரடியாக கட்சிக்குத் திரும்ப கிளைகள் ஆர்வம்!

1178
0
SHARE
Ad

Palanivelகோலாலம்பூர் – நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் மீண்டும் அதே பழைய சங்கப் பதிவக விவகாரங்களை, பழனிவேல் தரப்பில் இருந்து செயல்படும் ஒரு குழுவினர் எழுப்பியுள்ளதால்,

கட்சிக்கு வெளியே இருந்து நொந்து போயிருக்கும் பல மஇகா கிளைகள் மீண்டும் நேரடியாக நடப்பு மஇகா தேசியத் தலைவருடன் சுமுகமாக இணைந்து, கட்சிக்குள் திரும்புவதற்கு முடிவு செய்துள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் கடந்த வெள்ளிக்கிழமை பழனிவேல் அணியினரின் ஒரு குழுவினரின் நடவடிக்கையின் மூலம், ‘பழனிவேல் அணியினர்’ எனக் கூறிக் கொள்ளும் தரப்பினருக்குள் கடுமையான பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் இதன் காரணமாக, இந்த அணி மூன்று தரப்பாகப் பிரியலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பழனிவேல் இல்லாததால் அணியிலிருந்து பிரியும் மஇகா கிளைகள்

முதல் கட்டமாக, இந்த அணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிளைகளின் எண்ணிக்கை சுமார் 800 ஆக இருக்கலாம் என்றும் இவற்றில் பெரும்பாலானவை பழனிவேலுவின் தலைமைத்துவத்தை விரும்பிய காரணத்தால், இதுவரை கட்சிக்குள் திரும்பாமல் இருக்கின்ற கிளைகள் என்றும் கூறப்படுகின்றது.

Palanivel -Sothinathan-Balakrishanஆனால், தற்போது பழனிவேலுவே இந்த அணியினருக்குத் தலைமை தாங்கவில்லை என முடிவு செய்யப்பட்டு, இந்த அணிக்கு இனி டத்தோ சோதிநாதனும், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும் தலைமை தாங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் காரணமாக பழனிவேலுவின் ஆதரவாளர்கள் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது.

“நாங்கள் பழனிவேலுவை நம்பி, பழனிவேலுவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டதால்தான், டாக்டர் சுப்ராவை எதிர்த்து இதுவரை கட்சிக்கு வெளியில் இருந்து செயல்பட்டு வந்தோம். இப்போது இவர்கள் பழனிவேலுவையே தூக்கியெறிந்து விட்டார்கள் என்னும் போது, இவர்களின் (சோதி, பாலா) தலைமைத்துவத்தின் பின்னால் செல்ல நாங்கள் விரும்பவில்லை. இனி நாங்கள் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தையே ஏற்றுக் கொண்டு கட்சிக்குத் திரும்பி தொடர்ந்து செயல்பட்டு வர முடிவெடுத்துள்ளோம்” என பழனிவேல் தரப்பு கிளைத் தலைவர் ஒருவர் கூறுகின்றார்.

பிரச்சனையில்லாத கிளைகள் உடனடியாக கட்சிக்குள் திரும்பலாம்

MIC logoவெளியில் இருக்கும் ஏறத்தாழ, 800 கிளைகளில், பெரும்பாலான கிளைகள் பிரச்சனையில்லாத, சட்டபூர்வக் கிளைகளாகும். இந்த டிசம்பர் மாதத்தில் தங்கள் கிளைகளின் சந்தாப்பணத்தை மஇகா தலைமையகத்தில் செலுத்தி விட்டால் மட்டும் போதும். இந்தக் கிளைகள் உடனடியாக செயல்படத் தொடங்கலாம்.

அடுத்த ஆண்டு கட்சித் தேர்தல் நடைபெற்றால் அதில் கலந்துகொண்டு, உறுப்பியத் தொடர்ச்சி இழப்பு ஏதும் இல்லாமல் தொடர்ந்து செயல்படலாம்.

இந்நிலையில், சரி நடந்தது நடந்து விட்டது, சோதி, பாலாவின் தலைமையை ஏற்று, இதுவரை ஒன்றாக செயல்பட்டு வந்த நாம் அனைவரும் ஒன்றாகவே கட்சிக்குத் திரும்புவோம் என பல கிளையினர் இதுவரை காத்திருந்ததாகத் தெரிகின்றது.

K.Ramalingam MIC Batuஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிர்மாறாக, கடந்த வெள்ளிக்கிழமை, பழனிவேல் அணியைச் சேர்ந்த டான்ஸ்ரீ பாலகிருஷ்ணனும், பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கமும் (படம்) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் பழைய கதையையே கிளறுவதுபோல் சில இணைய அஞ்சல்களைக் காட்டி, ஏன் சங்கப் பதிவதிகாரி அந்த ‘பழைய முடிவுகளை’ எடுத்தார் என்ற ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கியிருக்கின்றனர்.

இதனால், கட்சியில் இணைப்பு ஏற்படும் என்பதும், வெளியில் உள்ள கிளைகள் ஒரே குழுவாக மீண்டும் கட்சிக்குள் திரும்புவதும் இனி நடக்காத காரியம் என்பதை உணர்ந்து கொண்ட பல கிளைத் தலைவர்கள், பழனிவேலுவே ஒதுங்கிக் கொண்டு விட்டதால், அல்லது புறக்கணிக்கப்பட்டு விட்டதால், இனி தாங்களே நேரடியாக டாக்டர் சுப்ராவை அணுகி மீண்டும் கட்சிக்குள் வருவதற்கு முடிவு செய்துவிட்டார்கள் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

sothi2அந்த வகையில் இந்த கிளைகளின் தலைவர்கள் சிலர் டாக்டர் சுப்ராவுக்கு நெருக்கமான தரப்புகளுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர் என்றும், சிலர் நேரடியாகவே சுப்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

கிளைகளுக்கான சந்தாவைச் செலுத்துவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டவுடன், இந்தக் கிளைகள் மீண்டும் தங்களின் கிளைகளுக்குரிய சந்தாவைச் செலுத்தி, மஇகாவில் மீண்டும் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது தரப்பாக சோதி தரப்பு பிரியலாம்

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சோதிநாதன் கலந்து கொள்ளாததும் மஇகா வட்டாரங்களில் பல ஐயங்களை எழுப்பியிருக்கின்றது.

பழனிவேல் தரப்பினர் மீண்டும் கட்சிக்குத் திரும்பினால் எதிர்காலத்தில் உதவித் தலைவராகவோ, ஏன் தேசியத் துணைத் தலைவராகவோ, மீண்டும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருப்பவர் சோதிநாதன்.

வெளியில் நிற்கும் மஇகா கிளைகள், மீண்டும் கட்சிக்குள் திரும்ப பிரதமர் நஜிப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியவரும் சோதிநாதன்தான்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும், சங்கப் பதிவக விவகாரம் கிளறப்பட்டுள்ளதால், சோதிநாதன் முன்னெடுத்துச் சென்ற இணைப்பு முயற்சிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், அவரும் அவர் சார்பான கிளைகளும் நேரடியாகவே சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் கட்சியில் இணையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் இரண்டாவது தரப்பாக பழனிவேல் அணியிலிருந்து பிரியக் கூடும்.

அடுத்ததாக, டான்ஸ்ரீ பாலா, ராமலிங்கம், போன்ற ஒருசில தலைவர்களின் பின்னால் உறுதியுடன் நிற்கும் சொற்ப கிளைகள் மட்டும் கட்சிக்குள் வராமல் வெளியில் இருந்து வருவார்கள் எனவும் இவர்களே மூன்றாவது தரப்பாக பிரிந்து நிற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக, பழனிவேல் இல்லாத தலைமைத்துவம், சோதிநாதனின் இக்கட்டான சூழல், பாலா, ராமலிங்கம் குழுவினர் கிளப்பியுள்ள சங்கப் பதிவக விவகாரம் ஆகிய காரணங்களால், இனி பழனிவேல் தரப்பு மூன்று அணிகளாகப் பிரியத் தொடங்கும் என மஇகா விவகாரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வரும் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளைகளுக்கான சந்தாப் பணம் கட்டுவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, இறுதி நாளான ஜனவரி 31க்குள் பழனிவேல் தரப்பில் செயல்படும் கிளைகளில் எத்தனை கிளைகள் நேரடியாகவே சந்தாப் பணத்தை செலுத்தி கட்சிக்குள் தங்களை இணைத்துக் கொள்ளும் என்பது தெளிவாகத் தெரிந்து விடும்.

அதன் பின்னர்தான், பழனிவேல் தரப்பினர் என்று கூறிக் கொள்ளும் அணியினரின் பின்னால் அணிவகுத்து நிற்கும் கிளைத் தலைவர்களின் எண்ணிக்கையும், பலமும் வெளிச்சத்துக்கு வரும்!

-இரா.முத்தரசன்