கோலாலம்பூர் – தமிழகத்தில் உள்ள தங்களின் சகோதர இனத்தினர் மழை-வெள்ளத்தால் அனுபவித்து வரும் துன்பங்களில் பங்கு பெற்று உதவி புரிவதற்காக நிதி திரட்டும் பணிகளில், மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
மலேசியாவில் இருந்து வெளிவரும் மிகப் பழமையான பத்திரிக்கையான தமிழ் நேசன் சேவை ஆசிரமம் அறவாரியத்தின் ஒத்துழைப்போடு ‘தமிழக வெள்ள நிவாரண நிதி’ ஒன்றைத் தொடக்கியுள்ளது. தமிழ் நேசன் நிர்வாக வாரியத் தலைவர் டத்தின்ஸ்ரீ இந்திராணி சாமிவேலு இந்த நிதியை நேற்றுத் தொடக்கி வைத்தார்.
மற்றொரு முன்னணி பத்திரிக்கையான ‘மலேசிய நண்பன்’ தாங்கள் தொடக்கியுள்ள வெள்ள நிவாரண நிதிக்கு நேற்று முதல் நாளே 14,000 ரிங்கிட்டுக்கும் கூடுதலான தொகை வசூலிக்கப்பட்டதாக தனது இன்றைய பதிப்பில் அறிவித்துள்ளது.
‘ஓசை அறவாரியம்’ அமைப்புடன் இணைந்து, மக்கள் ஓசை நாளிதழும் தமிழக வெள்ளப் பேரிடர்உதவி நிதி ஒன்றைத் தொடக்கியுள்ளது. பல வணிகப் பிரமுகர்கள் இந்த நிதிக்கு தங்களின் நன்கொடைகளை அறிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்திய வம்சாவளியினருக்கான உலக அமைப்பான ‘கோபியோ’ (Global Organisation People of Indian Origin) என்ற அமைப்பின் மலேசியக் கிளையுடன் இணைந்து ‘தமிழ் மலர்’ பத்திரிக்கையும் நிவாரண நிதி ஒன்றைத் தொடங்கியிருக்கின்றது. மயூக் எனப்படும் மலேசிய இந்தியப் பட்டதாரிகள் சங்கம், ஓம்ஸ்அறவாரியம், மற்றும் ஆனந்த ராணி மகளிர் மாத இதழ் ஆகிய அமைப்புகளும் இந்த நிதி திரட்டும் முயற்சியில் தமிழ் மலர் பத்திரிக்கையுடன் கைகோர்த்துள்ளன.