சென்னை – “சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை சரி செய்ய முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்து போய்க் கிடக்கிறது” என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பான கருத்தினை தெரிவித்துள்ள நிலையில், இதற்கு அதிமுக வட்டாரத்தில் இருந்து கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கமல் குறித்து வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையில், கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா போர்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டியதை விடுத்து கமல், உள்ளிருந்து கொல்லும் நோய்போல விமர்சனம் செய்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் அவரின் அறிக்கையில், “எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்” என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன், “கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே” என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கும் அமைச்சர், தனது அறிக்கையில் கேலியாக பதிலடி கொடுத்துள்ளார். “இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்! அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளப் பேரிடர் குறித்து ஆலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய இந்த தருணத்திலும், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தான் ஆக வேண்டுமா? என பொது நோக்கர்கள் அமைச்சரின் கருத்தை விமர்சித்துள்ளார்.