சென்னை – ‘நடிகர் கமல்ஹாசனை காணவில்லை’ என சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், “நடிகர் கமல்ஹாசனை காணவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் நிவாரண முகாம்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாது பொது மக்களையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கான காரணம் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமானது தான் என்று கூறப்படுகிறது.
சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது, ஆளும் அரசு குறித்து காட்டமான அறிக்கை ஒன்று கமல் பெயரில் வெளியானது. அரசு நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு அமைச்சர் பன்னீர் செல்வமும் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்து இருந்தார். எனினும், கமல்ஹாசன் அடுத்த நாளே, தான் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்றும், தனது பத்திரிக்கை நண்பருக்கு அனுப்பிய சராசரி குடிமகனின் புலம்பல் தான் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் கமலின் இந்த பதிலால் ஆளும் தரப்பு சமாதானம் அடையவில்லை என்றும், அதன் எதிரொலி தான் இந்த சுவரொட்டிகள் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே மற்றொரு சாரார், இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டும் அளவிற்கு, தரம் தாழ்ந்த அரசியலை செய்ய வேண்டிய அவசியம் ஆளும் தரப்பிற்கு இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது பாரதிராஜா, விஸ்வரூபம் வெளியான தருணத்தில் கூறிய வார்த்தைகள் தான் நினைவிற்கு வருகின்றன.
“கமல் ஒரு மகாக் கலைஞkன். அரசியல் பாதையில் கமலையும் இறக்கி விட்டுராதீங்க. அப்படி அவர் அரசியலுக்கு வந்தா முழுசா எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் வருவார். அதை உங்களால் தாங்க முடியாது” என்று கூறியிருந்தார்.