கோலாலம்பூர் – மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஐஎஸ் அச்சுறுத்தல் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில், “தீவிரவாதம் தொடர்பான புள்ளிவிவர எண்ணிக்கை (50,000) என்பது உளவுத்துறையின் மதிப்பீடுகள் தான். தற்போது ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பவர்களில் 1 சதவீதம் பேர் தீவிரவாதத்தில் இறங்கி, மலேசியாவில் தாக்குதல் நடத்தினாலும், அது நாட்டிற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் படி, 100 மலேசியர்கள் சிரியா மற்றும் ஈராக்கில் ஜிகாதிகளுடன் இணைந்து சண்டையிடுவதற்காக சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை, சிரியாவில் இருந்து திரும்பிய 19 வயது மாணவனை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட அந்த மாணவன், 2014- ஆண்டு மத்தியில், அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைப்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.