திருவனந்தபுரம் – தாயின் கருவில் இருக்கும் 29 வார சிசுவிற்கு, இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கேரள மருத்துவர்கள் சாதித்துக் காட்டி உள்ளனர்.
கேரள மாநிலம் அமிர்தா மருத்துவ அறிவியல் ஆய்வுக்கழக மருத்துவர்கள் சமீபத்தில், ஒரு தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு இதயத்தில் சிறு குறைபாடு இருப்பதை கண்டறிந்தனர். அதன் காரணமாக சிசு வளர்ச்சிக்கும், பிறப்பிற்கும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்த குறைபாட்டில் இருந்து சிசுவை காப்பாற்ற வேண்டும் என்றால், மிகவும் சிக்கலான ‘அயார்டிக் வால்வுலோப்ளாஸ்டி’ (aortic valvuloplasty) என்று அழைக்கப்படும் இதய அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவர் பாலு வைத்தியநாதன் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் பாலு வைத்தியநாதன் கூறுகையில், “சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இனி குழந்தையின் பிறப்பிலும், வளர்ச்சியிலும் எத்தகைய சிக்கலும் வராது என நம்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.