ஜியோர்ஜ் டவுன்: அண்மையக் காலங்களில் சர்ச்சைக்குள்ளான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்கிறார்களா என்பதை நிர்ணயிக்கவும், அந்தப் பிரச்சனை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்து அறப்பணி வாரியத்தின் அண்மைய சர்ச்சையில் சிக்கியது பத்து கவான் தோட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயமாகும். இந்த ஆலயத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஈடுபட்டதாக அந்தத் தோட்டத்து மக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அந்த ஆலயத்தைப் இந்து அறப்பணி வாரியம் பூட்டி விட்டதாகவும் ஒரு சர்ச்சை நிலவிய நிலையில், இராமசாமி இந்து அறப்பணி வாரியத்தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டுமென பத்துகவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலரான மு.வீ.மதியழகன் அறைகூவல் விடுத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் இந்து அறப்பணி வாரியத்தின் நடவடிக்கைகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) பார்வைக்குக் கொண்டு செல்லப்போவதாக டாக்டர் சுப்ரா அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சில அரசு சார்பற்ற இயக்கங்கள் இந்து அறப்பணி வாரியத் தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான இராமசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் நாளை (புதன்கிழமை) மாலை கோலாலம்பூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கிடையில் இந்து அறப்பணி வாரியத்தால் பூட்டப்பட்டதாகக் கூறப்படும் பத்து கவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் தற்போது திறக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.