கோலாலம்பூர் – எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேளையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கட்சிக்கு வெளியே இருக்கும் சகோதர கிளைத்தலைவர்கள் அனைவரும் வேட்புமனுத்தாக்கலில் பங்குபெற்று மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டுமென மஇகா மத்திய செயலவையின் முன்னாள் உறுப்பினர் சுந்தர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் (படம்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இன்று கட்சிக்கு வெளியே இருக்கும் எனது சகோதர கிளைத்தலைவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். சில மாதங்களுக்கு முன்பு வரை நானும் உங்களில் ஒருவனாக, உங்களோடு இந்த அரசியல் போராட்டத்தில் முன் நின்றவன்தான். ஆனால் ஒற்றுமை ஒன்று மட்டுமே நமது கட்சியிலும், இந்திய சமுதாயத்திலும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்பதை சில மாதங்களுக்கு முன்பு நன்கு உணர்ந்ததால், நான் கட்சிக்குத் திரும்பி விட்டேன். கட்சிக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப இது இறுதி வாய்ப்பு என்பதோடு, மரியாதையோடும், கௌரவத்தோடும் கட்சிக்குள் மீண்டும் இணைவதற்கும் இதைவிடப் பொருத்தமான நேரம் மீண்டும் அமையாது” என்றும் சுந்தர் சுப்ரமணியம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் மீண்டும் இணைந்தது முதற்கொண்டு, தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் சிறப்பான தலைமைத்துவ செயல்பாடுகளை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், கட்சி தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைத் தன்னால் நன்கு உணர முடிவதாகவும் சுந்தர் மேலும் கூறியுள்ளார்.
டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தின் கீழ், இந்திய சமுதாயத்தின் கணிசமான ஆதரவைப் பெற்று வருவதாலும், கட்சி தனது பழைய பெருமைகளையும், வெற்றிகளையும் மீண்டும் காண முடியும் என்று நம்புவதாகவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.
“நடந்தது ஓர் அரசியல் தலைமைத்துவப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் எனது சகோதர கிளைத் தலைவர்களாகிய நீங்கள் சிறப்பாகவே போராடினீர்கள். ஆனால், இப்போது அந்தப் போராட்டத்திற்கு இனியும் வேலையில்லை. பழைய விவகாரங்களையும், முடிந்து போன பிரச்சனைகளையும் இனியும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், அதன்மூலம் கட்சியை வலுப்படுத்துவதற்குமான நேரம் வந்துவிட்டது. நமது அரசியல் பகைமைகளை மறப்போம். ஒன்று சேர்ந்து அடுத்தகட்டப் பயணத்திற்குத் தயாராவோம். 14வது பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வந்துவிடும். அதற்காக நாம் இப்போதே, உடனடியாகத் தயாராக வேண்டும். கடந்த சில ஆண்டுகளை, அந்த அரிய காலத்தை, உட்கட்சிப் போராட்டத்திலும், நீதிமன்றப் போராட்டத்திலும் நாம் செலவழித்து விட்டோம். ஆனால், இப்போது அதையெல்லாம் மறந்து விட்டு நாம் இணைந்து கைகோர்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்றும் சுந்தர் கூறினார்.
“எனது சகோதர கிளைத் தலைவர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். தேசியத்தலைவர் விடுத்துள்ள அழைப்பை ஏற்று எல்லோரும் முதலில் கட்சிக்குத் திரும்புங்கள். டிசம்பர் 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கலில் பங்கு பெறுங்கள். நமக்குள் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இன்னும் இருப்பதாக நீங்கள் கருதினால், அவற்றை நீங்கள் கட்சிக்குத் திரும்பியுவுடன் நமக்குள் பேசி தீர்த்துக் கொள்ளலாம். எதிர்வரும் 14வது பொதுத்தேர்தலில் நாம் எவ்வாறு வெற்றியடையப்போகின்றோம் என்பதை வைத்துத்தான் நமது கட்சியின் எதிர்காலமும், தேவையும் அடங்கியிருக்கின்றது. எனவே, நமது கட்சியின் எதிர்கால வெற்றிக்காகவும், நமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும், நமது தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்புகளை மறந்துவிட்டு மீண்டும் நாம் இணைவோம். வாருங்கள்!” என்றும் சுந்தர் சுப்ரமணியம் தனது பத்திரிக்கை அறிக்கையில் கட்சிக்கு வெளியில் இருக்கும் கிளைத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.