Home Featured கலையுலகம் பீப் பாடலுக்கு கவிஞர்கள் கண்டனம்: இனியாவது தடுக்கப்படுமா பாடல்களில் ஆபாசம்?

பீப் பாடலுக்கு கவிஞர்கள் கண்டனம்: இனியாவது தடுக்கப்படுமா பாடல்களில் ஆபாசம்?

714
0
SHARE
Ad

simbu-anirudhசென்னை – சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியானதாகச் சொல்லப்படும் சர்ச்சைக்குரிய பீப் பாடலுக்கு தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் ஒன்று சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக மக்கள் செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கோடான கோடி ரசிகர்கள் கண்டு களிக்கும் திரைப்படம் போன்ற பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் எந்த ஒரு படைப்பும் சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அந்த வகையில் சர்ச்சைக்குரிய அந்த பீப் பாடல் பெண்களை இழிவு படுத்தும் நோக்கிலும், ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேவேளையில், மழை வெள்ளத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், அவர்களை மேலும் வெறுப்பேற்றும் வகையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

பீப் சத்தம் ஏன் வருகிறது என்று கேட்டு சிறு பிள்ளைகளின் மனதில் ஆர்வத்தைத் தூண்டும் படியான இந்தப் பாடலைப் பரவ விட்டால் நாகரீகம் இழந்த தொற்றுநோய் அவர்கள் மனதில் பரவிவிடும் என்றும் பாடலாசிரியர்கள் கருதுகின்றனர்.

அந்தப் பாடலை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் அவர்கள், இனி இது போன்ற சமூகத்தை சீரழிக்கும் பாட்டுகள் வெளிவராமல் இருக்க கலைஞர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அந்தக் கூட்டறிக்கையில், புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, பா.விஜய் உள்ளிட்ட பிரபல பாடலாசிரியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனிடையே, அறுவறுக்கத்தக்க வார்த்தையை நேரடியாகச் சொல்லும் பீப் பாடலுக்கு இப்படி எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள், ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’, ‘அப்பா அம்மா விளையாட்ட விளையாடிப் பார்ப்போமா’ போன்ற மறைமுகமாக வக்கிரங்களைச் சொல்லும் பாடல்களுக்கு ஏன் அப்போது வாயை மூடிக் கொண்டு இருந்தீர்கள்? என்று ஒரு தரப்பினர் இணையத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ போன்ற பாடல்களை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் தானே அது போன்ற பாடல்களை தொடர்ந்து கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், இன்று அதை விட மோசமான  தரங்கெட்ட வார்த்தையை வைத்து பாடலை உருவாக்கியிருப்பார்களா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், அடுத்து வரும் பாடல்கள் பீப் ஒலி இன்றி நேரடியாகவே வார்த்தைகளை பிரயோகிக்கும் பாணியும் வந்துவிடும் என்பதே பலரின் கவலை.

எனவே, இதற்கு ஒரேத் தீர்வு அது போன்ற இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்ட பாடல்களும், ஆபாசங்களையும், வக்கிரங்களையும் சொல்லும் பாடல்களையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான்.