கோலாலம்பூர் – நேற்று நாடெங்கிலும் ‘ஜகாட்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, தற்போது மலேசியர்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்று வருகின்றது.
நமது இந்தியர்களோடு, மலாய்காரர்களும், சீனர்களும் குடும்பத்தோடு ‘ஜகாட்’ திரைப்படத்தைக் கண்டுகளித்து பேஸ்புக் வாயிலாக மனதார வாழ்த்தி வருகின்றனர்.
‘ஜகாட்’ திரைப்படத்தில் அக்கதை நடக்கும் 1980-ம் ஆண்டு சூழலை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி, கதையோடு நம்மை ஒன்றச் செய்துவிடும் அளவிற்கு ஈர்ப்பு உள்ளது.
காரணம், அதன் தரமான ஒளிப்பதிவும், கதைக்குத் தேவையான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மலேசியாவின் பல்வேறு இடங்களும் தான்.
அப்படிப்பட்ட இடங்கள் ‘ஜகாட்’ இயக்குநர் சஞ்சய் பெருமாளுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிட்டதா? என்றால் இல்லை என்பதே அவரது பதிலாக உள்ளது.
சுமார் 10 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு அந்த இடங்கள் அவரது கண்ணில் பட்டிருக்கிறது.
இது குறித்து சஞ்சய் தனது அனுபவத்தைக் கூறுகையில், “சட்ட விரோத குடிசைப்பகுதியின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதன் அடிப்படையில் தான் ‘ஜகாட்’ திரைப்படத்தின் காட்சிகள் எப்படியெல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்பதை என் மனக்கண்ணில் உருவேற்றியிருந்தேன். இப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு வைத்திருந்தேன். சினிமாத்துறையில் வேலை செய்து கொண்டே அக்கதைக்கு வடிவம் கொடுத்தேன், காட்சிகளை வரைந்தேன்.”
“நான் என் மனக்கண்ணில் பார்த்த அந்த குடிசைப் பகுதி இந்நாட்டில் எங்கேயாவது ஒரு மூளையிலிருக்கும் என்ற நம்பிக்கையோடு 2005-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை தேடி அழைந்தேன். நான் நினைத்த அந்தக் காட்சி என் கண்களுக்கு புலப்படவில்லை.அந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.”
“நான் தேடிக்கொண்டிருக்கும் அந்தக் காட்சி பேரா மாநிலத்தில் இருக்கக் கூடும் என்ற உள்ளுணர்வு 2009-ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்டது. அதை நான் உறுதியாகவும் நம்பினேன். தேடியும் பார்த்தேன். கிடைக்கவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டில் ‘The Day That River Ran Red’ எனும் குறும்படம் தயாரிப்பதற்காக பேரா மாநிலம் செல்லும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி குபு காஜாவிலும், செலாமாவிலும் அந்த இடத்தை தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.இறுதியாக ஹுலு பேராவிற்குச் சென்றேன். வியப்பின் விளிம்பில் நின்றேன். 10 ஆண்டுகளாக மனக்கண்ணில் உருவேற்றியிருந்த காட்சியை என் கண்ணெதிரில் கண்ட தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத சொர்க்க தினம். அந்த இடமே என்னைக் கைபிடித்து அழைத்து வந்ததாக உணர்ந்தேன்” என்று சஞ்சய் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சஞ்சயின் தேடலுக்குப் பலனாகக் கிடைத்த ஹுலு பேரா உட்பட மொத்தம் 14 இடங்களில் ‘ஜகாட்’ திரைப்படம் படமாக்கப்படுள்ளது.
குவால செபெதாங், கிரிட், கினியான் இந்தான், லெங்கோங், பெங்காலான் ஹுலு, பாலிங், புக்கிட் ரோத்தான், சபாக் பெர்ணம், நீலாய், சிம்பாங், போர்ட் கிள்ளான், கோலாலம்பூர், ஜெராண்டுட், ஜாசின் ஆகிய பல்வேறு இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜகாட்’ திரைப்படம் குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்துங்கள்:-
முகநூல் :www.facebook.com/jagatthemovie
இணையத்தளம் : www.jagatthemovie.com
டுவிட்டர்: www.twitter.com/jagatthemovie
காணொளி: https://vimeo.com/skyzen