Home Featured வணிகம் ஆசியானின் 5வது பெரிய பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன்தான்! மற்ற நால்வர் யார்?

ஆசியானின் 5வது பெரிய பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன்தான்! மற்ற நால்வர் யார்?

810
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராகப் பட்டியலிடப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன், அண்மைய புள்ளி விவரங்களின்படி ஆசியான் வட்டாரத்திலேயே 5வது பெரும் பணக்காரராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

இவர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமாவார்.

Ananda Krishnanமற்ற நால்வர் யார்?

#TamilSchoolmychoice

ஆசியான் வட்டாரம் பத்து நாடுகளை உள்ளடக்கிய வட்டார அமைப்பாகும். இந்த வட்டாரத்தில் முதலாவது பெரும் பணக்காரராக பிலிப்பைன்ஸ் நாட்டின், 90 வயதான ஹென்ரி சை (Henry Sy) திகழ்கின்றார். இவரது சொத்து மதிப்பு 14.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

அடுத்து, 2வது, 3வது இடங்களில் இருக்கும் இரண்டு பெரும் பணக்காரர்கள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாவர். ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராகத் திகழ்பவர் டானின் செராவனோந்த். 75 வயதான இவருக்கு 13.6 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. தாய்லாந்து நாட்டின் மிகப் பெரிய பணக்காரரும் இவர்தான்.

ஆசியான் மண்டலத்தின் மூன்றாவது பெரிய பணக்காரர், 70 வயதான தாய்லாந்து நாட்டின் சாரோன் ஸ்ரீவதனபக்டி எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 13.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

91 வயதான மலேசியாவின் ரோபர்ட் குவோக்தான் ஆசியானின் நான்காவது மிகப் பெரிய பணக்காரர் ஆவார். மலேசியாவிலேயே இவர்தான் முதல் நிலையில் இருக்கும் பணக்காரர். இவரது சொத்து மதிப்பு 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள ஆனந்தகிருஷ்ணன் 9.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை சொத்து மதிப்பாகக் கொண்டிருக்கின்றார். மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான இவரின் பெரும்பாலான செல்வம் மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, மற்றும் பூமி அர்மாடா என்னும் பெட்ரோலிய எண்ணெய் சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகியவற்றுக்குள் அடங்கியிருக்கின்றது.

77 வயதான ஆனந்தகிருஷ்ணன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் என்பதோடு, வணிகக் கல்விக்குப் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ எனப்படும் முதுகலைப் பட்டத்தை வணிக நிர்வாகத்தில் பெற்றவராவார்.