இலண்டன் – பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் என்ன நடந்தாலும் செய்திதான்! அடுத்த ஆண்டு ஜனவரியில் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியர் தங்களின் மூத்த மகன் இளவரசர் ஜோர்ஜ்ஜை மழலைப் பள்ளிக்கு (நர்சரி) அனுப்பவிருக்கின்றனர்.
இலண்டனில் உள்ள பெரிய பள்ளிகள் எதற்கும் அனுப்பாமல் நோர்ஃபோக் (Norfolk) என்னும் ஊரில், இலண்டனில் இருந்து தூரத்தில் ஒரு புறநகரில் இருக்கும் ‘வெஸ்ட்ஏக்கர் மோண்டிசோரி’ எனப்படும் நர்சரிப் பள்ளியில்தான் ஜோர்ஜ் தனது முதல் பள்ளிக் கல்வியைத் தொடங்குகின்றார்.
மோண்டிசோரி என்பது புகழ்பெற்ற பிரிட்டிஷ் மழலைப் பள்ளி கல்வி முறையாகும்.
இளவரசர் ஜோர்ஜ் படிக்கப்போகும் வெஸ்ட்ஏக்கர் மோண்டிசோரி மழலைப்பள்ளி இதுதான்….
இந்தப் பள்ளி வில்லியம் தம்பதியரின் ‘சண்டிரிங்காம்’ அரச குடும்பத்து தோட்ட அரண்மனைக்கு அருகில் அமைந்திருக்கிறதாம்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து “எங்களின் பள்ளிக்கு ஜோர்ஜ் வருகை தருவதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம். மற்ற குழந்தைகளைப் போலவே ஜோர்ஜ்ஜும் இங்கே தனிப்பட்ட, சிறப்பான கவனிப்பைப் பெறுவார்” என அந்தப் பள்ளியும் அறிவித்திருக்கின்றது.
சாதாரண குடும்பச் சூழலில் வளர்க்க விருப்பம்
தங்களின் பிள்ளைகள் அரச குடும்பத்தினர் ஆனாலும், எதிர்காலத்தில் பிரிட்டிஷ் அரண்மனையின் இளவரசர்களாக – இளவரசிகளாக – மன்னர்களாக வலம் வரப்போகும் வாரிசுகள் என்றாலும் அவர்களும் சாதாரண குடும்பத்துப் பிள்ளைகள் போலவே வளர வேண்டும் என நோக்கம் கொண்டிருக்கும் வில்லியம் தம்பதியரின் மற்றொரு முயற்சிதான் இந்த சாதாரண மழலைப் பள்ளிக்கு தங்களின் மகனை அனுப்பும் நடைமுறையும்.
ஜோர்ஜ் தினமும் பள்ளிக்கு செல்ல மாட்டார் என்றாலும், பள்ளி செல்லும் தருணங்களில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற மழலைச் செல்வங்களுடன் கலந்து பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.
ஜோர்ஜ் படிக்கப்போகும் வெஸ்ட்ஏக்கர் பள்ளி, அந்த வட்டாரத்தில் 15 மைல் சுற்றளவுக்குள் இருக்கும் மழலைப் பிள்ளைகளை மட்டுமே அனுமதிக்கும் பள்ளியாகும்.
இந்த அறிவிப்போடு, எதிர்வரும் கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு சிறப்பு குடும்பப் புகைப்படம் ஒன்றையும் வில்லியம் தம்பதியர் வெளியிட்டுள்ளனர்.
புதிய இளவரசி சார்லோட்டின் முதல் கிறிஸ்மஸ் இதுவாகும் என்பதால், தற்போது நால்வரைக் கொண்டுள்ள வில்லியம் தம்பதியரின் குடும்பத்திற்கு இது சிறப்புக்குரிய கிறிஸ்மஸ் கொண்டாட்டமாகும்.
-செல்லியல் தொகுப்பு